இராணுவச் சேர்ப்பு அலுவலத்தின் மீது தாக்குதல் திட்டம்: சந்தேக நபர் கைது
உக்ரைனின் உத்தரவின் பேரில் இராணுவச் சேர்ப்பு அலுவலகம் மீது தாக்குதல் திட்டமிட்டதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கலுகா பிராந்தியத்தில், இராணுவச் சேர்ப்பு அலுவலத்தின் மீது தீவைப்புத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை ரஷ்யா கைது செய்துள்ளது.
சந்தேக நபர் கைது
ரஷ்யாவின் FSB பாதுகாப்புப் பிரிவு புதன்கிழமையன்று, கலுகா பிராந்தியத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததாக தெரிவித்தது.
குறித்த நபர், உக்ரைனின் உத்தரவின் பேரில் மத்திய கலுகா பிராந்தியத்தில் உள்ள இராணுவச் சேர்ப்பு அலுவலகம் ஒன்றின் மீது தீவைப்புத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
உக்ரைனின் இராணுவ உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பல்வேறு குற்றச் செயல்களைச் செய்வதற்காக தனக்கு பணம் தருவதாகக் கூறியதாக, கைது செய்யப்பட்ட குறித்த 22 வயது நபர் தெரிவித்த காணொளியை அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
மேலும் அந்த நபர், "முதலில் ரஷ்ய அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலான வாசகங்களை சுவர்களில் எழுதுவதும் (Graffiti), பின்னர் இராணுவச் சேர்ப்பு அலுவலகம் ஒன்றை எரிப்பதும் எனது பணிகளாக இருந்தன. கைது செய்யப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே தன்னை வழிநடத்திய நபருடன் தொடர்பில் இருந்ததாகவும்" அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாத செயலை மேற்கொள்ளத் திட்டமிட்டதாகக் கூறப்படும் கலுகா பகுதியைச் சேர்ந்த அந்த நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |