வெறும் 10 வருடங்களில் முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய 42 வயது நபர்
சீனாவில் 42 வயது நபர் ஒருவர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸை விடப் பெரிய நிறுவனத்தை உருவாக்கி உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
330 பில்லியன் டொலர்.
இவரது இந்த சாதனை அனைத்தும் வெறும் 10 வருடங்களில் நடந்துள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான TikTok செயலியை உருவாக்கியுள்ள ByteDance என்ற நிறுவனத்தின் நிறுவனர்களில் முதன்மையானவர் Zhang Yiming.
இன்று ByteDance நிறுவனத்தின் சந்தை மதிப்பு 330 பில்லியன் டொலர். இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 245 பில்லியன் டொலர்.
சீனாவின் புஜியன் மாகாணத்தில் பிறந்த யிமிங், நான்கை பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியலில் பட்டம் பெற்றார். அவர் தனது முதல் நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உட்பட சில நிறுவனங்களில் வேலை செய்தார்.
இந்த நிலையில் கட்டுமான நிறுவனங்கள் தொடர்பில், குடியிருப்புகள் மற்றும் கட்டுமானங்களில் தேடுபொறியான 99fang என்ற இணைய பக்கத்தை வெளியிட்டார்.
இதனையடுத்து 2012ல் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து ByteDance நிறுவனத்தை தொடங்கினார். 2016ல் காணொளிகளைப் பகிரும் Douyin என்ற செயலியை சீனாவில் வெளியிட்டார். 2017ல் அதன் சர்வதேச பதிப்பாக TikTok செயலியை வெளியிட்டார்.
தலைமை நிர்வாக அதிகாரி
அதன் பின்னர் உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்றுள்ளது. உலகளவில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள பயனர்களைக் கொண்ட டிக்டோக் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றாக மாறியது.
ஃபோர்ப்ஸ் சீனாவின் 30 வயதுக்குட்பட்ட 30 பேர்கள் பட்டியலிலும், பார்ச்சூன் பத்திரிகையின் 40 வயதுக்குட்பட்ட 40 பேர்கள் பட்டியலிலும், டைம் பத்திரிகையின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் போன்ற புகழ்பெற்ற வணிகப் பட்டியல்களில் யிமிங் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார்.
2021ல் ByteDance நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார். இருப்பினும் குறிப்பிடத்தக்க பங்குகளை தன் வசம் வைத்திருக்கும் யிமிங், தமது நிறுவன நிர்வாகத்தில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்களிக்கும் உரிமையையும் வைத்துள்ளார்.
சீனாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக அறியப்படும் யிமிங், தற்போது உலக பணக்காரர்கள் வரிசையிலும் இடம்பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 65 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. ஃபோர்ப்ஸ் வெலியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், உலகின் 27வது பணக்காரராக யிமிங் அறியப்படுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |