எவ்வகை தடைகளாலும் ரஷ்யாவின் போக்கை மாற்ற முடியாது... கிரெம்ளின் சவால்
உக்ரைன் போரில் ரஷ்யாவின் போக்கை மாற்ற எந்தத் தடைகளும் ஒருபோதும் கட்டாயப்படுத்தாது என்று கிரெம்ளின் திங்களன்று கூறியுள்ளது.
கிரெம்ளின் சவால்
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவிற்கு எதிராக கூடுதல் பொருளாதாரக் கட்டுப்பாடுகளைப் பரிசீலிப்பதாகக் குறிப்பிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு கிரெம்ளின் சவால் விடுத்துள்ளது.
உக்ரைனில் மூன்றரை வருட காலப் போர் மற்றும் 2014 இல் கிரிமியாவை வலுக்கட்டாயமாக இணைத்ததற்காக மேற்கு நாடுகள் ரஷ்யா மீது பல்லாயிரக்கணக்கான தடைகளை விதித்துள்ளன.
ரஷ்யாவின் 2.2 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை முடக்கி, ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கான ஆதரவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
ஆனால், ஜி7 நாடுகளை விடவும் ரஷ்ய பொருளாதாரம் வேகமாக வளர்ந்ததாகவும், பொருளாதார வீழ்ச்சியை கணித்த மேற்கத்திய நாடுகளையும் எதிர்கொண்டதாக புடின் கூறியுள்ளார்.
புடின் தீவிரமாக இல்லை
மட்டுமின்றி, தடைகளை தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் எதிர்கொள்ளுமாறு புடின் வணிகங்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, ரஷ்யா மீது இரண்டாம் கட்ட தடைகளை விதிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தடைகள் அமெரிக்காவுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா தெரிவித்தார்.
உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்தும் ரஷ்யா, வார இறுதியில் போரின் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில் அமைதி திரும்ப வேண்டும் என்பதில் புடின் தீவிரமாக இல்லை என்றும், ரஷ்யா போரில் வெற்றி பெறுவதைத் தடுக்க உலக நாடுகள் அனைத்து வழிகளையும் முயற்சிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனும் கோரியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |