பிரித்தானிய மகாராணியாரைத் தாக்க முயன்றது உண்மைதான்: ஒப்புக்கொண்டுள்ள இந்திய வம்சாவளி இளைஞர்
பிரித்தானிய மகாராணியாரின் அரண்மனை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய வம்சாவளியினர் ஒருவர், நான் ராணியைக் கொல்ல வந்திருக்கிறேன் என்று காவலர்களிடம் கூறிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
விண்ட்சர் மாளிகைக்குள் வில் அம்புடன் நுழைந்த நபர்
2021ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்தன்று, பிரித்தானிய மகாராணியாரின் விண்ட்சர் மாளிகைக்குள் வில் அம்புடன் நுழைந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைவிலங்கிடப்படும் முன், அரண்மனைக் காவலர்களிடம், நான் ராணியைக் கொல்ல வந்திருக்கிறேன் என்று கூறினாராம் அவர்.
விசாரணையில், பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றிவந்த அந்த நபருடைய பெயர் ஜஸ்வந்த் சிங் (Jaswant Singh Chail) என தெரியவந்தது.
தான் ஒரு இந்திய சீக்கியர் என்று கூறியுள்ள ஜஸ்வந்த் சிங், பிரித்தானியர்கள் இந்தியாவை ஆண்டபோது, 1919இல் இந்தியாவிலுள்ள அமிர்தரஸ் என்ற இடத்தில் பிரித்தானிய படையினரால் இந்தியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவதற்காக, தான் மகாராணியாரை கொல்ல வந்ததாக தெரிவித்திருந்தார்.
குற்றத்தை ஒப்புக்கொண்டார்
இந்நிலையில், இன்று Old Bailey நீதிமன்ற விசாரணையில், தான் பிரித்தானிய மகாராணியாரைத் தாக்க முயன்றது உண்மைதான் என ஜஸ்வந்த் சிங் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் மீது தேச துரோகக் குற்றம் உட்பட மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மகாராணியார் இருக்கும் இடத்துக்கு அருகில் வில் அம்புடன் நெருங்கியது, வில் அம்பை வைத்து மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தைத் தாக்கும் நோக்கம் கொண்டிருந்தது மற்றும் பொது இடம் ஒன்றில் வில் அம்பு வைத்திருந்ததுடன், மகாராணியாரை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகள் ஜஸ்வந்த் சிங் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜஸ்வந்த் சிங் ஒப்புக்கொண்டுள்ளார்.
Image: Kate Green/Getty Images

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.