பிரித்தானியாவில் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட மர்ம ஆயுதங்கள்: 35 வயதுடைய நபர் கைது
Belfast man charged with Weapons offences after police raids: பெல்ஃபாஸ்ட் நகரில் நடந்த சோதனையை தொடர்ந்து வெடிபொருள் மற்றும் ஆயுத வழக்கில் 35 வயது நபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சோதனையில் சிக்கிய ஆயுதங்கள்
வடக்கு பெல்ஃபாஸ்ட் பகுதியில் ஷான்கில் சாலை மற்றும் எட்வினா சாலை அமைந்துள்ள பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த அக்டோபர் 30 மற்றும் அக்டோபர் 31ம் திகதிகளில் இலக்கு வைக்கப்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பல பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டு விரிவான தடயவியல் ஆய்வுக்காக பொலிஸார் அனுப்பி வைத்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
வெடிபொருள் நிபுணர்களின் பாதுகாப்பு நடைமுறைகள் நிறைவடைந்ததை அடுத்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
35 வயதுடைய நபர் கைது
இந்த சம்பவத்தில் 35 வயது நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது சந்தேகத்திற்குரிய வகையில் வெடிபொருட்கள் வைத்திருந்த இரண்டு குற்றச்சாட்டுகள், மின்சாரம் அல்லது நச்சு வாயுவை வெளியிடும் தடை செய்யப்பட்ட ஆயுதத்தை வைத்திருந்த குற்றச்சாட்டுகள் என பல பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நவம்பர் 2ம் திகதி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவர் பெல்ஃபாஸ்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.