விஜய்யின் புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர் - என்ன நடந்தது?
விஜய்யின் புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக புதுச்சேரி பொதுக்கூட்டம்
புதுச்சேரியில் உள்ள உப்பள மைதானத்தில், இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில், புதுச்சேரியை சேர்ந்த QR அடையாள அட்டையுடன் கூடிய 5000 பேர் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஒரு பாஸ் வைத்திருந்தால் 2 பேர் அனுமதிக்கப்படுவதாக நிர்வாகிகள் கூறிய நிலையில், காவல்துறையினர் ஒருவரை மட்டுமே அனுமதித்து வருவதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள், உள்ளே வருபவர்களை மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை செய்து அனுமதித்து வருகிறார்கள்.
துப்பாக்கியுடன் வந்த நபர்
அப்போது உள்ளே வந்த ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததை கண்ட காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரியை சேர்ந்த டேவிட் என்பதும், CRPF பிரிவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், அவர் தவெகவின் சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் பிரபுவின் பாதுகாப்பாளராக பணியாற்றி வருகிறார்.

மருத்துவர் பிரபுவின் பாதுகாப்புக்கு, அரசு அனுமதியுடன் 2 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரபு புதுச்சேரி பொதுக்கூட்டத்துக்கு வந்துள்ளதால் அவரின் பாதுகாப்புக்காக டேவிட் அவருடன்வந்ததும் தெரியவந்தது.
உரிமம் பெற்ற துப்பாக்கியாக இருந்தாலும், இங்கு கொண்டு வர ஏன் அனுமதி வாங்கவில்லை என்பது குறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |