அமெரிக்க ராணுவ விமானத்தை சேதப்படுத்திய நபர்: அயர்லாந்து விமான நிலையத்தில் பரபரப்பு
அமெரிக்க ராணுவ விமானத்தை சேதப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ராணுவ விமானம் சேதம்
அயர்லாந்தின் Shannon விமான நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபர் ஒருவர் அமெரிக்க ராணுவ விமானத்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த அத்துமீறிய செயல் காரணமாக சனிக்கிழமை விமான நிலைய செயல்பாடுகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் இது தொடர்பாக வெளியான காட்சிகளில், சந்தேக நபர் சனிக்கிழமை காலை 11 மணிக்கு விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார்.
பின்னர் அமெரிக்க விமானப் படையின் C-130 ஹெர்குலஸ் ரக போக்குவரத்து விமானத்தின் இறக்கைகள் மீது ஏறிய நபர், தன்னுடைய கையில் இருந்த பொருளால் விமானத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்.

அயர்லாந்து காவல்துறையினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், பொதுசொத்துக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டு கீழ் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலைமையை சீர் செய்ய கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை எடுத்ததாகவும், அதுவரை விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் கிளேர்/திப்பர்ரி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது இந்த செயலுக்கான நோக்கம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |