பிரித்தானியாவில் வனவிலங்கு பூங்காவில் கூண்டுக்குள் குதித்த நபர்: கடித்து கொன்ற புலி
Man Died by Tiger Bite in Uk Wildlife Park: பிரித்தானியாவில் வனவிலங்கு பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் புலி தாக்கி உயிரிழந்துள்ளார்.
புலி தாக்கி இளைஞர் பலி
பிரித்தானியாவின் டான்காஸ்டர் அருகே உள்ள யார்கஷையர் வனவிலங்கு பூங்காவின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்த நபர் ஒருவர் புலி தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பொதுமக்கள் பார்வையிடும் பகுதியில் இருந்து புலிகள் அடைக்கப்பட்ட பகுதிக்குள் திடீரென குதித்த நபரை அங்கு வசித்து வந்த சைபீரியன் வகை புலி கொடூரமாக தாக்கியது.
விரைந்து செயல்பட்ட வனவிலங்கு பூங்கா அதிகாரிகள் அந்த நபரை மீட்டு, மருத்துவ குழுவினரின் தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
புலி தாக்கி உயிரிழந்தவரின் விவரங்கள் மற்றும் அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

அத்துடன் இந்த தாக்குதலில் ஈடுபட்ட புலிக்கு இந்த சம்பவத்தில் எந்தவொரு காயங்களும் ஏற்படவில்லை என்றும், அது பாதுகாப்பாக கூண்டிற்குள் அடைக்கப்பட்டு விட்டதாகவும் சவுத் யார்க்ஷயர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு இதனால் நேரடி பாதிப்புகள் எதுவும் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புலி தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.