அயர்லாந்தில் அகதிகள் முகாமில் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு, 40 வயது நபர் கைது
Man dies at Tralee Migrant Accommodation violent: அயர்லாந்தில் அகதிகள் முகாமில் வெடித்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகதிகள் முகாமில் வன்முறை
அயர்லாந்தின் டிராலி பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாதுகாப்பு தங்குமிட சேவை மையத்தில் சனிக்கிழமை அதிகாலை நடந்தேறிய வன்முறை சம்பவம் தொடர்பாக அவசர உதவி பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் படுகாயமடைந்து கிடந்த நபரை மீட்டு மருத்துவ முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர்.
இருந்த போதிலும் அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வன்முறை சம்பவத்தில் 40 வயதுடைய மற்றொரு நபரும் காயமடைந்து இருப்பதாகவும், அவர் சிகிச்சைக்காக தற்போது கெர்ரி பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரின் உயிருக்கு தற்போது எந்தவொரு ஆபத்தும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது மற்றும் விசாரணை
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய 40 வயதுடைய மற்றொரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் வன்முறை நடைபெற்ற இடத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாகவும், தடயவியல் ஆய்வுகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், தாக்குதலுக்கான முழுமையான காரணத்தை கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.