இன்ஸ்டாகிராமில் ரகசியம் சொல்வதாக கூறி ரூ.8.5 கோடி வசூல் செய்த மர்ம நபர்
இன்ஸ்டாகிராமில் ரகசியம் சொல்வதாக கூறி முகமுடி அணிந்த நபர், 1.66 லட்சம் பயனர்களிடம் ரூ.500 வசூலித்து ரூ.8.5 கோடி வசூல் செய்துள்ளார்.
ரகசியம் சொல்வதாக கூறி ரூ.8.5 கோடி மோசடி
சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் முகம் காட்டாத மர்ம நபர் ஒருவர், 25august2026 என்ற பயனர் பெயரில் கணக்கு தொடங்கியிருந்தார்.

முகமுடி அணிந்து கொண்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதி மிகப்பெரிய விடயத்தை வெளியிடப்போவதாக கூறி அந்த நபர் ரீல்ஸ் வெளியிட்டு கொண்டிருந்தார். சுமார் 4 லட்சம் பேர் அவரை பின்தொடர தொடங்கினர்.
அப்படி என்ன ஆகஸ்ட் 25 ஆம் திகதி வெளியிட போகிறார்? ஏதாவது பிரபலம் குறித்த அறிவிப்பா? ஸ்டார்ட்அப் நிறுவன தொடக்கமா? என தெரிந்து கொள்ள பயனர்கள் ஆர்வம் காட்ட தொடங்கினர்.
ஆகஸ்ட் 25 ஆம் திகதிக்கான அறிவிப்பு டெலிகிராமில் வெளியிடப்படும் எனக்கூறி அதற்கான லிங்கை பகிர்ந்தார்.
அவரை பின்தொடர்பவர்கள் டெலிகிராமிற்கு செல்ல அங்கு அந்த லிங்கிற்கு பின்னால் உள்ள விடயத்தை அணுக ரூ.500 கட்டணம் செலுத்தமாறு கூறப்பட்டது.
சுமார் 1 லட்சத்து 66 ஆயிரம் பேர் அந்த தொகையைச் செலுத்தியுள்ளனர். இதன்மூலம், அந்த முகமூடி அணிந்த நபர் சுமார் ரூ.8.5 கோடி வசூல் செய்துள்ளார்.
ஆனால் ஏதோ பெரிய ரகசியத்தை தெரிந்து கொள்ள போகிறோம் என நினைத்து பணம் செலுத்தியவர்களுக்கு, "அதிகாலையில் எழு, உன் நேரத்தை மதி, உன்னை நீயே உருவாக்கிக்கொள்' என்பது போன்ற AI மூலம் உருவாக்கப்பட்ட மோட்டிவேஷனல் வீடியோ மட்டுமே இருந்துள்ளது.

இதனை இலவசமாக பார்க்கலாமே இதற்கு ஏன் ரூ.500 செலுத்தினோம் என பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனை பலரும் 2026 ஆம் ஆண்டின் மிகப்பெரிய மோசடி என வர்ணிக்கின்றனர். ஒரு சிலர் இது மோசடி இல்லை, வணிக உத்தி என தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |