ஜேர்மன் சேன்ஸலரை கட்டிப்பிடித்த நபருக்கு தண்டனை
ஜேர்மன் சேன்சலர் பயணிக்கும்போது, அவரது பாதுகாப்பு வாகனங்களுடன் இணைந்து பயணித்ததுடன், அவரை கட்டியும் பிடித்த ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் சேன்ஸலரை கட்டிப்பிடித்த நபர்
ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் பிராங்பர்ட் விமான நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஒரு 50 வயது நபர் அவருடன் கைகுலுக்கியதுடன் அவரை கட்டியும் அணைத்தார்.
விடயம் என்னவென்றால், போதைப்பொருள் எடுத்திருந்த அவர், ஜேர்மன் சேன்சலர் பயணிக்கும்போது, அவரது பாதுகாப்பு வாகனங்களுடன் இணைந்து பயணித்துள்ளார்.
அவரது வாகனம் பாதுகாப்பு வாகனங்களுடன் விமான நிலையத்துக்குச் செல்ல, அதிகாரிகள் சேன்ஸலரை கைகுலுக்கி வழியனுப்பும்போது இந்த நபரும் அவருடன் கைகுலுக்கியதுடன் அவரை கட்டியும் அணைத்துள்ளார்.
அப்போதுதான் அவர் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் அல்ல என தெரியவர, உடனடியாக அவரை கைது செய்துள்ளார்கள்.
சேன்ஸலர் இந்த விடயத்தால் பயப்படவில்லை என்றாலும், சேன்ஸலரின் பாதுகாப்பு குறித்த சர்ச்சையை இந்த சம்பவம் உருவாக்கியது.
இந்நிலையில், தான் போதையில் இருந்ததாகவும், அதனால், தெரியாமலே சேன்ஸலரின் பாதுகாப்பு வாகனங்களுடன் தான் இணைந்து பயணித்ததாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு பிராங்பர்ட் மாவட்ட நீதிமன்றம் 4,500 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது.
தனது தவறுக்கு வருந்திய அவர், இனி பொறுப்புடன் நடந்துகொள்ள முயற்சிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |