இரண்டு சுவர்களுக்கு இடையே 2 நாட்கள் சிக்கியிருந்த நபர்: நியூயார்க்கில் சம்பவம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு தியேற்றரின் சுவர்களுக்குள் சிக்கிக்கொண்ட நபரை இரண்டு நாட்களுக்கு பின்னர் பொலிசார் மீட்டுள்ளனர்.
நியூயார்க் நகரின் Syracuse பகுதியில் அமைந்துள்ள தியேற்றர் ஒன்றிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி 7.30 மணியளவில், இரு சுவர்களுக்கு இடையே இருந்து உதவி கேட்டு கதறும் சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து தியேற்றர் நிர்வாகிகள் பொலிசாருக்கும் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை ஊழியர்களுக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், சுற்றின் ஒரு பகுதியை உடைத்து, அந்த நபரை மீட்டுள்ளனர்.
உடைகள் ஏதும் இல்லாமல் மீட்கப்பட்ட அந்த நபர், அங்கே இரண்டு நாட்கள் சிக்கியிருந்தாக தெரிய வந்துள்ளது. சுவர்களுக்கிடையே அந்த நபர் எப்படி சிக்கிக்கொண்டார் என தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், அந்த நபர் ஒரு வாரமாக தியேற்றர் சுற்றுவட்டாரத்தில் சுற்றித்திரிந்ததை ஊழியர்கள் சிலர் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், அவர் எப்போது தியேற்றரின் உள்ளே நுழைந்தார் அல்லது எப்போது சுவர்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டார் என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, முதற்கட்ட விசரணையில் அந்த நபர் உளவியல் பாதிப்பு கொண்டவர் எனவும், அவர் மீது வழக்கு பதியவோ அடையாளப்படுத்தவோ வாய்ப்பில்லை என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.