சிறுவனை கண்டித்த ஆசிரியை: மிரட்டிய தந்தைக்கு சிறை
A father has been jailed for threatening his son's teacher in France: பிரான்சில், தன் மகனைக் கண்டித்த ஆசிரியையை மிரட்டிய தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரான்சிலுள்ள Le Fauga என்னும் கிராமத்தில், அப்தெல்காதர் (47) என்னும் நபரின் மகன் வகுப்பில் சேட்டை பண்ணிக்கொண்டிருந்ததால், அவனை வேறொரு வகுப்பில் அமர வைத்துள்ளார் அவனது ஆசிரியை.
சிறுவனை கண்டித்த ஆசிரியை
அப்போதும் அவன் அமைதியாகாததால், வம்பு செய்கிறவன் போல் நடந்துகொள்ளாதே என அவனைத் திட்டினாராம் அந்த ஆசிரியை.
அந்தச் சிறுவன் தன் ஆசிரியை தன்னைத் திட்டியதை தன் தந்தையிடம் சென்று கூற, அவர் பள்ளிக்குச் சென்று, கார் பார்க்கிங்கில் வைத்து அந்த ஆசிரியையை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவர் பள்ளிக்கு வரவழைக்கப்பட, அந்த ஆசிரியையைப் பார்த்து, நீ ஆணாக இருந்திருந்தால் உன் தலையை வெட்டி விடுவேன் என்று மிரட்டியுள்ளார் அப்தெல்காதர்.
அதைக் கேட்டு பயந்துபோன ஆசிரியை மருத்துவ விடுப்பில் போய்விட்டாராம். பிற ஆசிரியர்களும் பள்ளிக்கு வர அஞ்சுகிறார்களாம்.
இந்நிலையில், விடயம் நீதிமன்றத்தை எட்ட, அப்தெல்காதருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் சட்டப்படி, பிள்ளைகளால் பிரச்சினை ஏற்படும்போது அவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்பதால், சம்பந்தப்பட்ட மாணவனும் அவனது தங்கையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட உள்ளார்கள்.
ஒரு பள்ளியில் ஒரு மாணவனை ஒரு ஆசிரியை திட்ட, அவனது தந்தை ஆசிரியையை மிரட்ட, ஏன் இப்படி சட்டம் வரை இந்த விடயத்தில் தலையிட்டு சிறைத்தண்டனை வரை செல்கிறது என்றால், அதற்குக் காரணம் உள்ளது.
2020ஆம் ஆண்டு, சாமுவேல் (Samuel Paty) என்னும் ஆசிரியர் குறித்து ஒரு மாணவி தன் தந்தையிடம் பொய்யாக புகார் ஒன்றைக் கூற, அவர் அதை நம்பி மதம் சார்ந்த பிரச்சினையாக மாற்ற, பயங்கரவாத எண்ணம் செசன்ய அகதியான Abdoullakh Anzorov என்பவன், சாமுவேலை தலையை வெட்டிக் கொன்றுவிட்டான்.
அதே நிலை தனக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று பயந்தே இந்த ஆசிரியையும் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.
ஆகவேதான் இந்த விடயத்தை பிரான்ஸ் அரசு கையில் எடுத்துள்ளதுடன், அப்தெல்காதருக்கு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.