விமானியின் அறைக்கு நுழைய முயற்சி... நகரும் விமானத்திலிருந்து குதித்த நபரால் பரபரப்பு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானியின் அறைக்குள் நுழைய முயற்சித்த ஒருவர் நகரும் விமானத்தில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட காரணங்களால் அடையாளம் வெளிப்படுத்தப்படாத அந்த நபர் திடீரென்று விமானத்தின் அவசர கதவை திறந்து நகரும் விமானத்தில் இருந்து வெளியே குதித்துள்ளார்.
தொடர்ந்து ஓடுதளத்தின் ஒருபகுதியில் வைத்து அவர் பிடிக்கப்பட, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நகரும் விமானத்தில் இருந்து குதித்துள்ளதால் காயம் பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் விமானத்தில் பயணிகளின் அத்துமீறல் மற்றும் விதிகளை மீறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்த ஆண்டு மட்டும் சுமார் 3,000 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 7.10 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்ததும், ஒடுபாதையை நோக்கி விமானம் சென்றுகொண்டிருந்தது. அப்போது, உள்ளே இருந்த ஒரு பயணி திடீரென தமது இருக்கையில் இருந்து எழுந்து, விமானியின் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார்.
பின்னர் விமானத்தின் அவசர கால வாசல் கதவை திறந்து அதன் வழியாக வெளியே குதித்துள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் மற்றும் அந்த பயணியின் நோக்கங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.