காதல் திருமணம் செய்த மகன், ஆதரவளித்த பாட்டியை ஆணவக்கொலை செய்த தந்தை! உயிருக்கு போராடும் மருமகள்
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்ததால் தனது மகனையே தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
காதலுக்கு எதிர்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்த இவர் அனுஷா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு சுபாஷின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் தந்தையின் பேச்சை சுபாஷ் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கு வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டது.
சொந்த ஊருக்கு திரும்பிய காதல் தம்பதி
இந்த நிலையில், நேற்றைய தினம் தனது மனைவியுடன் சொந்த ஊரான அருணபதிக்கு சுபாஷ் வந்துள்ளார். அங்கு தனது பாட்டி கண்ணம்மாவின் வீட்டிற்கு சுபாஷ் சென்றதை அறிந்த தண்டபாணி, ஆத்திரத்துடன் அரிவாளை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.
சுபாஷ், அவரது மனைவி அனுஷா மற்றும் தனது தாய் கண்ணம்மா ஆகியோரை சரமாரியாக தண்டபாணி வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் மூவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
மகன், பாட்டி பரிதாப மரணம்
கொடூர தாக்குதலில் சுபாஷ், பாட்டி கண்ணம்மா உயிரிழந்தனர். அனுஷா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தண்டபாணியை தேடி வருகின்றனர்.