2,500 மீற்றர் உயர மலையில், இளம்பெண்ணை தனியாக விட்டுவந்த ஜேர்மானியர்
Police investigate German man after girl, 17, left stranded on Germany’s highest mountain: ஜேர்மானியர் ஒருவர், 17 வயது பெண்ணொருவரை ஜேர்மனியின் உயரமான மலையில் தன்னந்தனியாக விட்டுவந்த விடயம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
ஜேர்மனியின் பவேரியாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரும், அவரது தோழியான 17 வயது பெண்ணும் ஜேர்மனியின் உயரமான மலையான Zugspitze மலையில் ஏற திட்டமிட்டுள்ளார்கள்.

2,500 மீற்றர் உயர மலையில் ஏறிய ஜோடி உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு, ஆஸ்திரியா நாட்டிலுள்ள Ehrwald என்னும் கிராமத்திலிருந்து இருவரும் புறப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் 2,500 மீற்றர் உயரத்தை அடைந்த நேரத்தில் வெப்பநிலை திடீரென குறையத் துவங்கியுள்ளது.
வெப்பநிலை மைனஸ் 12 டிகிரி செல்ஷியஸை அடைய, பனியும் பயங்கரமாக பெய்யத் துவங்கியுள்ளது.
முழங்காலளவு பனியில் இருவரும் நடந்து செல்ல, அந்தப் பெண்ணால் அதற்கு மேல் நடக்கமுடியாமல் போனதாக ஜேர்மன் ஊடக நிறுவனமான Deutsche Presse-Agentur தெரிவிக்கிறது.
அதைத் தொடர்ந்து, அந்த இளம்பெண்னை தனியே விட்டுவிட்டு அந்த இளைஞர் மட்டும் மலையிலிருந்து இறங்கியுள்ளார்.
அந்தப் பெண் மொபைல் மூலம் உதவி கோரி அழைக்க, மோசமான வானிலை காரணமாக மீட்பு குழுவினரால் உடனடியாக புறப்பட முடியாமல் போயுள்ளது.
என்றாலும், ஹெலிகொப்டர் ஒன்றில் புறப்பட்ட மீட்புக்குழுவினர் ஏழு பேரும், அந்த இளம்பெண் இருக்கும் இடத்தை கஷ்டப்பட்டு அடைந்து, ஹைப்போதெர்மியா பிரச்சினையால் அவதியுற்றிருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
விடயம் என்னவென்றால், 2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், இதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாமஸ் (Thomas Plamberger, 36) என்னும் ஆஸ்திரியா நாட்டவரும், அவரது காதலியான கெர்ஸ்டினும் (Kerstin Gurtner, 33) ஆஸ்திரியாவிலேயே உயரமான Grossglockner என்னும் சிகரத்துக்குச் சென்றிருந்தார்கள்.

இருவரும் ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ள, தன் காதலியை தனியாக விட்டுவிட்டு உதவி தேடிச் சென்றுள்ளார் தாமஸ்.
குளிரை சமாளிக்க சரியான போர்வை போன்ற எதுவும் இல்லாததால் குளிரில் உறைந்து உயிரிழந்துவிட்டார் கெர்ஸ்டின்!
தாமஸுக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், 9,400 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆக, தற்போது தன் தோழியை 2,500 மீற்றர் உயரத்தில் தனியாக விட்டு வந்த ஜேர்மானியர், தன்னிச்சையாக முடிவெடுத்தாரா, அல்லது இருவரும் கலந்து பேசி அந்த முடிவை எடுத்தார்களா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
அவர் தன் தோழியை தன்னந்தனியாக தவிக்க விட்டு வந்திருப்பார் என தெரியவந்தால், ஆஸ்திரியா நாட்டு சட்டப்படி அவர் மூன்று மாதம் வரை சிறை செல்ல நேரிடலாம் என்கிறது தி இண்டிபென்டண்ட் பத்திரிகை.