வெறும் 35 டொலருக்கு பேரம் பேசி வாங்கப்பட்ட பீங்கான் கிண்ணம்; அதன் உண்மையான மதிப்பை கேட்டு அதிர்ந்துபோன நபர்
அமெரிக்காவில் ஒரு சந்தை விற்பனையில் 35 டொலருக்கு வாங்கப்பட்ட ஒரு சிறிய பீங்கான் கிண்ணத்தின் உண்மையான மதிப்பு 500,000 டொலர் என ஆச்சரியமான உண்மை வெளிவந்துள்ளது.
அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான Connecticut-ல் ஒருவர் கடந்த ஆண்டு ஒரு சந்தையில் ஒரு அழகிய பீங்கான் கிண்ணத்தை பேரம் பேசி 35 டொலருக்கு வாங்கியுள்ளார். வாங்கியவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
அந்த கிண்ணத்தை அவர் புகைப்படம் எடுத்து ஒரு கலைப்பொருள் நிபுணரிடம் அனுப்பியுள்ளார். அதை நேரில் கொண்டுவந்து காண்பிக்கும்படி சொன்ன நிபுணர், கிண்ணத்தை பார்த்துவிட்டு ஒரு அதிர்ச்சியான சுவாரசியமான தகவலைக் கொடுத்துள்ளார்.
அந்த கிண்ணம் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் அதன் மதிப்பு 300,000 டொலர் முதல் 500,000 டொலர் வரை விலைபோகும் என ஆவர் கூறியதைக் கேட்டு அதன் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.
1402 முதல் 1424 காலக்கட்டத்தில் சீனாவின் Ming வம்சத்தை சேர்ந்த பேரரசர் Yongle-வின் அவைக்காக பிரத்தியேகமாக வரையப்பட்ட கிண்ணம் அது என நிபுணர் கூறியுள்ளார்.
இதுபோன்ற பீங்கான் கிண்ணம் உலகத்திலேயே 6 தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒன்று தான் இது என தெரியவந்துள்ளது.
மீதமுள்ள 5 கிண்ணங்களில், 2 கிண்ணங்கள் தைவானின் தைப்பேயில் உள்ள தேசிய அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ளன, 2 லண்டனில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ளன மற்றும் தெஹ்ரானில் உள்ள ஈரானின் தேசிய அருங்காட்சியகத்தில் ஒன்று உள்ளது என்று கூறப்படுகிறது.
