மூளையில் பொருத்தப்பட்ட எலான் மஸ்க் நிறுவன சிப் - நினைப்பதன் மூலம் செயல்களை செய்யும் நபர்
மூளையில் பொருத்தப்பட்ட சிப் உதவியுடன், மனதில் நினைப்பதாலே சில செயல்களை இளைஞர் செய்து வருகிறார்.
நியூராலிங்க் சிப்
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், நியூராலிங்க்(Neuralink) எனப்படும் நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.
மனித எண்ணங்களை செயல்களாக மாற்றக்கூடிய மூளை மற்றும் கணினிக்கு இடைமுகமாக செயல்படக்கூடிய மைக்ரோ சிப்பை (Brain-Computer interface) உருவாக்குவதில் கவனம் செலுத்திவருகிறது.
உடலளவில் பாதிக்கப்பட்டு நடக்க முடியாதவர்களுக்கு, தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து கணினி போன்றவற்றைப் பயன்படுத்தி சில செயல்களை செய்ய முடியும்.
முதலில் குரங்குகளின் மூளையில் இந்த சிப்பை பொருத்தி வெற்றிகரமாக பரிசோதித்த பின்னர், மனிதனின் மூலையில் இந்த சிப் பொருத்தப்பட்டுள்ளது.
மனித மூளையில் பொருத்தப்பட்ட சிப்
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த 30 வயதான நோலந்த் ஆர்பாக்(Noland Arbaugh) என்பவருக்கு முதன் முதலாக மூளையில் அறுவை சிகிச்சை செய்து, இந்த சிப் பொருத்தப்பட்டது.
2016 ஆம் ஆண்டு இவருக்கு ஏற்பட்ட டைவிங் விபத்தில், அவரின் தோள்பட்டைக்குக் கீழே உள்ள பகுதி முழுவதும் செயலிழந்தது.
இதனால் எந்த செயல்களையும் செய்ய முடியாது என்றும், அனைத்து தேவைகளுக்கும் இன்னொருவரை சார்ந்திருக்க வேண்டியிருக்கும் என அஞ்சினார்.
ஆனால், இந்த சிப் பொருத்திய பிறகு அவரால் பல்வேறு செயல்களை செய்ய முடிகிறது.
சிப் எப்படி செயல்படும்?
நாற்காலியில் அமர்ந்துள்ள அவர், தனது கையை பயன்படுத்தாமலே கணினியில் கர்சரை(Cursor)நகர்த்துவது, சதுரங்கம் விளையாடுதல், இணையத்தில் உலாவுதல், வீடியோ கேம்களை விளையாடுதல் ஆகிய செயல்களை செய்ய முடிகிறது.
அவர் தனது விரல்களை அசைப்பதாக கற்பனை செய்யும் போது, மூலையில் பொருத்தப்பட்டுள்ள சிப், அதை புரிந்து கொண்டு கணினியில் செயல்படுத்துகிறது.
ஆனால் அவரின் இந்த பயணம் கடினமாக இருந்தது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, மூளையின் இயற்கையான துடிப்பு இயக்கங்கள் காரணமாக 85 சதவீத இழைகள் பின்வாங்கிவிட்டதாக பொறியாளர்கள் கண்டறிந்தனர்.
ஆனால், மற்றொரு அறுவை சிகிச்சை செய்வதற்குப் பதிலாக, நியூராலிங்க் நியூரான் சிக்னல்களின் குழுக்களைப் படிக்க மென்பொருளை மாற்றியமைக்கப்பட்டது.
இது குறித்து பேசிய நோலந்த் ஆர்பாக், "எனக்கு இந்த அறுவை சிகிச்சையில் உள்ள ஆபத்துகள் தெரியும். நல்லதோ கெட்டதோ, எதுவாக இருந்தாலும், நான் உதவுவேன்.
எல்லாம் சரியாக நடந்தால், நியூராலிங்கின் பங்கேற்பாளராக என்னால் உதவ முடியும், ஏதாவது பயங்கரமான சம்பவம் நடந்தால், அவர்கள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று எனக்குத் தெரியும். இது ஒரு அறிவியல் புனைகதையாக எனக்கு தெரிகிறது. நான் என்ன எதிர்பார்ப்பது என்றே தெரியவில்லை" என கூறி எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தார்.
எலான் மஸ்கின் இந்த தொழில்நுட்பம் மனித வாழ்வில் பெரும் புரட்சியாக பார்க்கப்பட்டாலும், இதில் உள்ள ஆபத்துகள் குறித்து பலரும் எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |