யூடியூப் பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்த இளைஞர் - இறுதியில் நேர்ந்த விபரீதம்
இளைஞர் ஒருவர் யூடியூப் வீடியோக்களை பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்த சம்பவம் விபரீதத்தில் முடிந்துள்ளது.
தீராத வயிற்று வலி
கர்ப்பிணிகள் சிலர் யூடியூப் வீடியோக்களை பார்த்து வீட்டிலே குழந்தை பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் நடப்பதுண்டு.
அதே போல் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் ஒருவர் யூடியூப் வீடியோக்களை பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள சுன்ராக் கிராமத்தில், 32 வயதான ராஜபாபு என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார்.
தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இவர், தனது 14 வயதிலே குடல் அழற்சி காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், அவருக்கு வயிறு வலி தீராத நிலையில், தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளார்.
தனக்கு தானே அறுவை சிகிச்சை
இதற்காக யூடியூப்பில் வீடியோக்களை பார்த்த அவர், அறுவை சிகிச்சைக்கு தேவையான கத்தி, ஊசி உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார்.
கடந்த புதன்கிழமை தனது அறையை பூட்டிக்கொண்டு, மரத்துப்போகும் ஊசியை செலுத்தி விட்டு, 7செமீ அளவிற்கு வயிற்றை கீறியுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட கத்தி ஆழமாக சென்றதால், வலி அதிகமாகி ரத்தம் வர தொடங்கியது.
அப்பொழுது, அவர் தனது வயிற்றில் ஏதோ ஒன்றை அகற்ற முயன்றுள்ளார். அது முடியாததால், உடனடியாக, வயிற்றில் 11 தையல்களை போட்டுகொண்டுள்ளார். ஆனால் வலி அதிகரித்த நிலையில், அவரது குடும்பத்தினரை அழைத்து நிலைமையை தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
உடனடியாக அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் செய்த தையல்களை பிரித்துவிட்டு, வேறு தையல் போட்டு, ரத்தம் வெளியேறுவதை நிறுத்தினார்.
அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆக்ராவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது போன்று தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்யும் ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |