98 வயதில் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் இந்தியர்! கவுரவித்து பாராட்டிய அரசாங்கம்
இந்திய மாநிலம் உத்திர பிரதேசத்தில் 98 வயதான மனிதர் தற்போது உழைப்புக்கு எடுத்துக்காட்டாக சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறார். உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலியில் வசிக்கும் 98 வயதான விஜய் பால் சிங், இந்த வயதிலும் தனது பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விருப்பம் இல்லை எனக் கூறி, சுயமாக உழைத்து சம்பாதித்துவருகிறார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல இளைஞர்கள் வேலையின்றி தவித்துவரும் நிலையில், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக விஜய் பால் சிங்கின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன. அவர், ரேபரேலி பகுதியில் தினமும் வேகவைத்த கடலை மசாலா (Channa Chat) வியாபாரம் செய்து சம்பாதிக்கிறார்.
ஏன் இந்த தள்ளாத வயதில் வேலை செய்கிறீர்கள் என கேட்டால் அவர் கூறும் பதில், "எனக்கு ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது. ஆனால், நான் வேலை செய்யாவிட்டால் என் உடல் விறைத்துவிடும். அதனால் நான் தொடர்ந்து வேலை செய்தால், 12 மாதங்களுக்கும் நான் ஆரோக்கியமாக இருப்பேன் " எனக் கூறுகிறார்.
இவரது வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, விஜய் பால் சிங் இத்தகைய வயதில் தன்னம்பிக்கையுடன் உழைப்பதற்காக உத்தரபிரதேச அரசால் கவுரவிக்கப்பட்டார்.
அவருக்கு தனியாக ரேஷன் கார்டு, ரூ.11,000 ரொக்கம், வாக்கிங் ஸ்டிக் மற்றும் பொன்னாடையை வழங்கி மாவட்ட நீதவான் வைபவ் ஸ்ரீவாஸ்தவா கவுரவித்துள்ளார். அவரை, உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சமூக வலைத்தளங்களில் கவனித்ததாக கூறினார்.
