பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பள்ளியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 14 வயது சிறுமி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பள்ளியில் கத்திக்குத்து
கடந்த செவ்வாய்க்கிழமை மான்செஸ்டரின் பிளாக்லி பகுதியில் உள்ள கோ-ஆப் அகாடமி பள்ளியில் கத்தி குத்து தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்ததும், பள்ளிக்கு அவசர கால மீட்பு படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விரைந்தனர்.
பள்ளியில் அரங்கேறிய கத்திக்குத்து சம்பவத்தில் 14 வயது சிறுவன், 14 வயது சிறுமி மற்றும் 27 வயது நபர் ஒருவர் என 3 பேர் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்கள் என்ற போதிலும் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடுகளுக்கு திரும்பினர்.

14 வயது சிறுமி மீது வழக்குப்பதிவு
இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 14 வயது சிறுமி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது முதலில் கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்தும் நோக்கம் என்ற குற்றப் பிரிவின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
உடனடியாக அவரை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட அந்த 14 வயது சிறுமி மீது 3 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் பள்ளி வளாகத்திற்குள் கத்தி வைத்திருந்த 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சிறுமி, மருத்துவ கண்காணிப்பில் தொடர் காவல்துறை பாதுகாப்பில் இருப்பதாக கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் டேவிட் மீனி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பயங்கரவாத பின்னணி எதுவும் இல்லை என்று தெளிப்படுத்திய அதிகாரிகள், வெள்ளிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |