மணிப்பூர் நிர்வாண வீடியோ: என் இதயம் கனத்து விட்டது! மோடி வேதனை
மணிப்பூர் சம்பவம் வேதனையை அதிகரித்துள்ளதாகவும், இதயம் கனத்துவிட்டதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் கலவரம்
இந்தியா, மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது.
அங்குள்ள மெய்தி இனத்தவர் தங்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க கோரி கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு குகி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரு சமூகத்தினருக்கும் கடந்த மே மாதம் முதல் தொடங்கிய மோதல் கலவரமாக வெடித்தது. இதனால், பல வீடுகள், கடைகள் தரைமட்டமாக்கப்பட்டன. அரசு தரப்பில் 135 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பல ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பிற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தினமும், தீ வைப்பு, துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன.
பெண்ணின் நிர்வாண வீடியோ
இந்நிலையில், மணிப்பூரில் காங்கோக்பி என்ற மாவட்டத்தில் பி பைனோ கிராமத்தில் மெய்தி சமூகத்தை சேர்ந்த ஆண்கள் குகி பழங்குடியின 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து செல்லும் வீடியோ நேற்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள், அந்த பெண்களை வயல்வெளியில் அழைத்துச் சென்று அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த மே 04 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. அதாவது, இரு சமூகத்தினரிடையே கடந்த மே 3 ஆம் திகதி மோதல் ஏற்பட்ட நிலையில், அடுத்த நாள் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மோடி வேதனை
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், மணிப்பூர் நிர்வாண வீடியோவை பார்த்ததும் என் இதயம் கனத்து விட்டது. பெண்களுக்கு நேர்ந்த இந்த கொடுமையை மன்னிக்க மாட்டோம். இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நாட்டிற்கே அவமானம் இழைத்த இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது" என கூறினார்.
இதனிடையே, இந்த சம்பவத்திற்கு தொடர்பான குற்றவாளிகளை அடையாளம் கண்டு விட்டோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |