அதிபர் பதவியேற்பு விழாவிற்கு வந்த பாதுகாப்பு படையினர் பலருக்கு கொரோனா! அதிகாரிகள் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பதவியேற்புக்கு பாதுகாப்பு வழங்க வாஷிங்டன் டி.சி.க்கு வந்துள்ள 150-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களால் நாடாளுமன்றம் மீது ஜனவரி 6-ம் தேதி பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசாங்கம் தலைநகர் வாஷிங்டனில் இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
அதற்கு 25,000 ஆயுதம் ஏந்திய தேசிய பாதுகாப்பு படையினரை நகரம் முழுக்க நிறுத்தியது.
அவர்கள் அனைவரும் நெருக்கடியான சூழலில் பணியாற்றிய நிலையில், சுமார் 150 முதல் 200க்கு உட்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பதிப்பட்ட தேசிய காவல்படை துருப்புக்களின் எண்ணிக்கை மேலும், உயரக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், பாதுகாப்பு படையினரிடையே தொற்று அதிகரிக்காமல் இருக்க அமெரிக்க இராணுவ அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
ஆயிரக்கணக்கான துருப்புக்கள் வீடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் சுமார் 15,000 பேர் வாஷிங்டனை விட்டு வெளியேறுவார்கள் என்றும் இராணுவம் கூறியுள்ளது.
ஏறக்குறைய 7,000 தேசிய காவல்படை வீரர்கள் மாத இறுதி வரை தங்கியிருப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து அதற்கும் குறைந்த எண்ணிக்கையிலான துருப்புக்கள் நீண்ட காலம் இங்கு தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.