சுவிஸ் நாட்டவர்கள் பலர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்: ஆனால்...
புற்றுநோயால் பாதிக்கப்படும் சுவிஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.
ஆனால், ஒரே ஆறுதல்... புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதுதான்!
2013ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடையில், ஆம்டொன்றிற்கு 23,100 ஆண்களுக்கும் 19,650 பெண்களுக்கும் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டின் சுவிஸ் புற்றுநோய் அறிக்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதற்கு முந்தைய ஐந்து ஆண்டு காலகட்டத்தை ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை 3,350 அதிகமாகும்.
இந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்த ஆண்டில் 26,000 ஆண்களுக்கும் 22,000 பெண்களுக்கும் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு, முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது காரணம் என இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் கூறியுள்ளார்கள்.
2013ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடையில், 9,400 சுவிஸ் நாட்டவர்களான ஆண்களும், 7,650 பெண்களும் ஆண்டொன்றிற்கு புற்றுநோய்க்கு பலியாகியுள்ளார்கள். அதாவது சுவிட்சர்லாந்தில் மரணமடந்தவர்களில் சுமார் 30 சதவிகிதம் ஆண்களும், 23 சதவிகிதம் பெண்களும் புற்றுநோயால் மட்டுமே மரணமடைந்துள்ளார்கள்.
ஆனால், மொத்தத்தில் புற்றுநோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1988க்கும் 2017க்கும் இடையில் ஆண்களில் 39 சதவிகிதமும், பெண்களில் 28 சதவிகிதமும் குறைந்துள்ளது.
2003க்கும் 2017க்கும் இடையிலான காலகட்டத்தைக் கவனிக்கும்போது, புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் ஆண்களில் குறைந்துள்ளது, பெண்களில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை. அதேநேரத்தில், கடந்த 20 ஆண்டுகளில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 0.8 சதவிகிதம் குறைந்துள்ளது, இளம்பெண்கள் மற்றும் பெண்களில் 1.8 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஒன்பது ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது, சுவிட்சர்லாந்தில் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்களிலும் சரி, பெண்களிலும் சரி குறைந்துள்ளது. அத்துடன், குறைவான அளவில் புற்றுநோயால் உயிரிழப்போர் பட்டியலில் சுவிஸ் நாட்டு ஆண்கள் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். பெண்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள். அதாவது புற்றுநோயால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை சுவிஸ் நாட்டில்தான் குறைவு!