தமிழக தேர்தல் நெருங்கும் வேளையில் அதிரடி திருப்பம்! அதிமுக கூட்டணியில் இருந்து விஜயகாந்தின் தேமுதிக விலகல்
அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது.
அதிமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில், இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அளவிலான அவசர ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்பின்னர் தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த், கூட்டணி குறித்து வெளியிட்ட அறிவிப்பில், நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக விஜய்காந்தின் அறிவிப்பையடுத்து பட்டாசு வெடித்து தேமுதிக தொண்டர்கள் உற்சாக கொண்டாடியுள்ளனர்.
தற்போது தேமுதிக வேறு கட்சிகளுடன் கூட்டணி வைக்குமா அல்லது தனித்து களம் காணுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.