பிரான்சின் பிரபல தலைவருக்கு கடும் பின்னடைவு... அரசியல் வாழ்க்கையை முடக்கும் நீதிமன்ற தீர்ப்பு
ஐரோப்பிய நாடாளுமன்ற நிதி மோசடி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, பிரெஞ்சு தீவிர வலதுசாரித் தலைவர் மரீன் லு பென் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில்
அத்துடன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடைவிதித்து, உடனடு அமுலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டுள்ள சம்பவம் லு பென் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய நிலநடுக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் அரசியலில் நான்காவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தவர் லு பென். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியான National Rally இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளது.
மட்டுமின்றி, இந்த தீர்ப்பினை ஒரு கேலிக்கூத்து என்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் சாடியுள்ளது. National Rally கட்சியின் தலைவர் 29 வயதான Jordan Bardella தெரிவிக்கையில், நீதிமன்றத்தால் இன்று அநியாயமாக தண்டிக்கப்பட்டவர் மரீன் லு பென் மட்டுமல்ல, பிரெஞ்சு ஜனநாயகத்தையே கொன்று புதைத்துவிட்டார்கள் என்றார்.
தற்போது 56 வயதாகும் மரீன் லு பென் பொதுவாழ்க்கையில் ஈடுபட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேல்முறையீடுக்கு வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, 2 ஆண்டுகள் இடைநிறுத்தம் செய்யப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள்
ஆனால், அவரது மேல்முறையீடுக்கான கால அவகாசம் முடியும் வரையில் சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படாது. மட்டுமின்றி, இந்த நடவடிக்கைகள் அமுலுக்கு வர பல ஆண்டுகளாகலாம் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, லு பென் விவகாரத்தில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு சர்வதேச அளவில் தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் நானே மரீன் என அறிவித்து தமது ஆதரவை பதிவு செய்துள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற நிதியை மோசடி செய்வதற்காக பல ஆண்டுகளாக ஒரு பெரிய திட்டத்தில் ஈடுபட்டதாக லு பென் மற்றும் அவரது கட்சி உறுப்பினர்கள் 24 பேர்கள், ஒன்பது முன்னாள் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது 12 நாடாளுமன்ற உதவியாளர்கள் உட்பட அனைவரும் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர்.
ஐரோப்பிய நாடாளுமன்ற உதவியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை பிரான்சில் உள்ள கட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காகப் பயன்படுத்தியது நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2004 மற்றும் 2016 க்கு இடையில், 4.5 மில்லியன் யூரோ முறைகேடு நடந்துள்ளது என்றே நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |