160 ஓட்டங்கள் விளாசியும் வீண்: ஆனாலும் ஆட்டநாயகனான மார்னஸ் லபுஷேன்
ஷெஃபீல்டு டெஸ்ட் தொடரின் குயின்ஸ்லேண்ட் மற்றும் டாஸ்மானியா அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.
ஜோர்டான் சில்க் சதம்
பிரிஸ்பேனின் ஆலன் பார்டர் ஃபீல்டு மைதானத்தில் நடந்த டெஸ்டில் டாஸ்மானியா மற்றும் குயின்ஸ்லேண்ட் அணிகள் மோதின.
டாஸ்மானியா அணி முதல் இன்னிங்ஸில் 379 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் ஜோர்டான் சில்க் (Jordan Silk) 104 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய குயின்ஸ்லேண்ட் அணியில் கவாஜா 69 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, ரென்ஷா 128 ஓட்டங்கள் குவித்தார்.
பொறுப்பாகவும், மிரட்டலாகவும் ஆடிய அணித்தலைவர் மார்னஸ் லபுஷேன் (Marnus Labuschagne) 160 ஓட்டங்கள் விளாசினார். இதில் 2 சிக்ஸர், 17 பவுண்டரிகள் அடங்கும்.
லபுஷேன் ஆட்டநாயகன்
அதன் பின்னர் வந்த வீரர்களும் சிறப்பான பங்களிப்பை அளிக்க, குயின்ஸ்லேண்ட் அணி 612 ஓட்டங்கள் குவித்தது. நிகில் சௌத்ரி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த டாஸ்மானியா அணி கடைசி நாளில் 7 விக்கெட்டுக்கு 317 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. நிகில் சௌத்ரி ஆட்டமிழக்காமல் 76 (80) ஓட்டங்களும், காலேப் ஜூவெல் 67 ஓட்டங்களும், வெதரால்ட் 57 ஓட்டங்களும் எடுத்தனர்.
குயின்ஸ்லேண்ட் அணித்தலைவர் மார்னஸ் லபுஷேன் 160 ஓட்டங்கள் மற்றும் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |