காருக்குள் அமர்ந்து புகைபிடிக்கும்போது சானிடைசர் பயன்படுத்திய நபர்... பின்னர் நிகழ்ந்த பயங்கரம்
காரில் செல்லும்போது புகைபிடித்துக்கொண்டே தன் கைகளில் சானிடைசரை தடவியுள்ளார் ஒருவர். அமெரிக்காவின் Maryland பகுதியில், தனது காரில் செல்லும்போது, புகைபிடித்துக்கொண்டே தனது கைகளை சானிடைசரால் சுத்தம் செய்துள்ளார் ஒருவர்.
அவரது வாயிலிருந்த சிகரெட்டிலிருந்து விழுந்த தீப்பொறியால், திடீரென அவரது கைகளில் பற்றிய தீ காரில் படர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து, கார் முழுவதும் பயங்கரமாக தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
வெளியாகியுள்ள புகைப்படங்களில் அந்த கார் பயங்கரமாகத் தீப்பற்றி எரிவதைக் காணலாம்.
இந்த சம்பவத்தில் அந்த நபர் உயிர் தப்பிவிட்டாலும் அவரது கைகளிலும் தொடைகளிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
அவர் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகரெட் பிடிக்கும்போது சானிடைசர் பயன்படுத்துவது ஆபத்தை உருவாக்கும், குறிப்பாக காருக்குள், என எச்சரித்துள்ளார்கள் தீயணைப்பு வீரர்கள்.