வீதியில் பல்லாயிரக்கணக்கானோர்: இஸ்ரேலை மொத்தமாக அதிரவைத்த சம்பவம்
காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும் வலியுறுத்தி டெல் அவிவில் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போரை நிறுத்து
ஹமாஸ் படைகளுக்கு எதிராக நெதன்யாகு அரசாங்கம் போர் பிரகடனம் செய்த 2023 அக்டோபர் மாதத்திற்கு பிறகு, இஸ்ரேலில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இதுவென்றே கூறப்படுகிறது.
பாலஸ்தீன மக்கள் மீதான இராணுவ நடவடிக்கையை நிறுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு பொது வேலைநிறுத்தத்தின் உச்சக்கட்டமாக நாடு தழுவிய இந்த போராட்டங்கள் மற்றும் பேரணி அமைந்துள்ளது.
போரை நிறுத்து, கடத்தப்பட்டவர்களை மீட்டு வா என்பதே இஸ்ரேலிய மக்களின் முழக்கமாக இருந்தது. ஹமாஸ் படைகளால் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் மற்றும் மாயமான குடும்பங்களுக்கான அமைப்பு ஒன்று ஞாயிறன்று நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.
டெல் அவிவில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500,000 பேர் கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெறும் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே இந்தப் போர் நீட்டிக்கப்பட்டு வருவதாக பலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
காஸாவை மொத்தமாகக் கைப்பற்றும் திட்டத்திற்கு நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் ஒரு வாரத்திற்கு பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போரில் மட்டுமே கவனம்
இந்த நிலையில் பணயக் கைதிகளை மீட்கவும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் குறிக்கோளுடன் நாட்டை மொத்தமாக ஸ்தம்பிக்க வைப்போம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் சபதம் செய்தனர்.
நாடு முழுவதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் போக்குவரத்துத் தடங்களைத் தடுத்தனர், டயர்களுக்கு தீ வைத்தனர் மற்றும் பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு 30க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேலில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் ஹமாஸ் படைகளுக்கு ஆதாரவாக அமையும் என பிரதமர் நெதன்யாகு கொந்தளித்துள்ளார். ஆனால், நெதன்யாகு அரசாங்கம் இதுவரை பணயக்கைதிகளை மீடும் நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுத்ததில்லை என்றும், போரில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பதிலளித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |