மியான்மரை அடுத்து... இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு
பசிபிக் தீவு நாடான டோங்காவில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.18 மணியளவில் பிரதான தீவின் வடகிழக்கில் 62 மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 185 மைல்களுக்குள் அமைந்துள்ள கடற்கரைகளில் ஆபத்தான பெரிய அலைகள் ஏற்படக்கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் நிலநடுக்கம் தொடர்பில் இதுவரை சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. பாலினேசிய தீவுக்கூட்டத்திற்குள் உள்ள ஒரு சுதந்திர நாடான டோங்கா, அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து சுமார் 2,000 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.
100,000 க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இப்பகுதி 171 தீவுகளால் ஆனது. பெரும்பாலான மக்கள் டோங்கடபுவின் பிரதான தீவில் வாழ்கின்றனர். உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்றான, டோங்கா தொடர்ந்து நிலநடுக்கங்களை எதிர்கொண்டு வருகிறது.
இதனிடையே, டோங்கா தீவுகளுக்கு அருகே 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் அவுஸ்திரேலியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றே மெல்போர்னில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இறப்பு எண்ணிக்கை 1,700
இதற்கிடையில், தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
சில குடும்பங்கள், தங்கள் அன்புக்குரியவர்கள் இன்னும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில், இடிபாடுகளை அகற்ற தங்கள் கைகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இறப்பு எண்ணிக்கை 1,700 க்கும் அதிகம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு மண்டலே அருகே 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நகரின் விமான நிலையம் போன்ற பிற உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன. ஞாயிற்றுக்கிழமை காலையிலும் நில அதிர்வுகள் தொடர்ந்து உணரப்பட்டன.
தாய்லாந்தில், 17 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் டசின் கணக்கானவர்களைக் காணவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மியான்மரில் இறப்பு எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |