ஒலிம்பிக் தங்க பதக்கத்தை ஆர்வகோளாறில் பல்லால் கடித்த மேயர்! ஒலிம்பிக் கமிட்டி எடுத்த அதிரடி முடிவு
ஒலிம்பிக் போட்டியில் முதலிடத்தை பெற்ற மியூ கோட்டோவின் தங்க பதக்கத்தை நகோயா நகர மேயர் வாயில் வைத்து கடித்துவிட்டதால் அவருக்கு வேறு பதக்கத்தை மாற்றித்தர ஒலிம்பிக் கமிட்டி ஒப்புக்கொண்டுள்ளது.
ஜப்பான் நகரம் டோக்கியோவில் 2020ஆம் ஆண்டு நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டி கடந்த வாரம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளிச் சென்றனர்.
ஜப்பான் வீராங்கனை மியூ கோட்டோ பெண்கள் சாஃப்ட்பால் பிரிவில் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை வென்றார். இவரை சிறப்பிக்கும் விதமாக அவரது சொந்த ஊரில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நகோயா நகர மேயர் தகாஷி வீராங்கனையிடம் இருந்து பெற்ற தங்க பதக்கத்தை பல்லால் கடித்துள்ளார். பொதுவாக தங்கம் பதக்கம் வழங்கப்பட்டதும் அதை பல்லால் கடித்து பார்ப்பது வழக்கம்.
ஆனால் தற்பொழுது கொரோனா தொற்று அபாயம் உள்ளதால் இந்த வழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி அவர் கடித்ததால் அந்த பதக்கத்தை திருப்பி பயன்படுத்த முடியாமல் போனது.
இதனால் மியூ கோட்டோவிற்கு வேறு பதக்கத்தை வழங்க ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.