வாங்கிய கடனை கேட்டவரின் வீட்டு சுவற்றில் 'சிறுநீர்' ஊற்றிய தமிழக மேயரின் தம்பி
தமிழக மாவட்டம், கோவை மேயரின் தம்பி குமார் என்பவர், கடன் கேட்டவரின் வீட்டு சுவற்றில் சிறுநீர் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ரூ.15,000 கடன்
கோவை மணியக்காரம்பாளையம் நட்சத்திர கார்டனில் வசித்து வரும் தம்பதியினர் சரண்யா (33) மற்றும் கோபிநாத். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் 10 ஆண்டுகளாக கோவையில் வசித்து வரும் நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தான் தற்போதுள்ள வீட்டிற்கு வந்துள்ளனர். மேலும், இவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள்.
இவர்கள் வசிக்கும் பின்புற வீட்டில் கோவை மேயர் கல்பனா, அவரது தாய் காளியம்மாள், மற்றும் மேயரின் தம்பி குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
மேயர் ஆவதற்கு முன்பு, கல்பனாவின் தாய் காளியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், கோபிநாத்திடம் இருந்து கடனாக ரூ.15,000 வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில், வாங்கிய கடனில் ஐந்தாயிரம் ரூபாயை திருப்பி கொடுத்ததாகவும், மீதி பத்தாயிரம் ரூபாயை தரவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், வாங்கிய பணத்தை திருப்பி கேட்டும் தராததால் கோபிநாத் கேட்காமல் விட்டுள்ளார்.
மேயரின் தம்பி டார்ச்சர்
இதன்பின்னர், கோபிநாத்திற்கு மேயரின் தம்பி குமார் அடிக்கடி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இருவர் வீட்டிற்கும் பொதுவாக இருந்த கேட்டையும் குமார் பூட்டியுள்ளார். இதனால் ஒரு மாதத்திற்கும் மேலாக கோபிநாத் தன்னுடைய காரை வெளியில் எடுக்க முடியவில்லை.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு மேயர் கல்பனா தனது குடும்பத்துடன் இந்த வீட்டில் குடியேறியுள்ளார். இதனையடுத்து, குமாரின் டார்ச்சர் அதிகமானது.
ஒரு கட்டத்திற்கு மேல் கோபிநாத் வீட்டின் சமையலறை சுவற்றின் பின்புறத்தில் கெட்டுப்போன சாப்பாடு, வெட்டப்பட்ட கோழிக்கழிவு மற்றும் வாளியில் சிறுநீரை பிடித்து ஊற்றியுள்ளார். இதனை, சிசிடிவி கேமரா வைத்து அனைத்தையும் கோபிநாத் பதிவு செய்துள்ளார்.
மேலும், தமிழக முதலமைச்சர் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் கோபிநாத் புகார் அளித்துள்ளார்.
மேயர் கூறியது
இது குறித்து கோவை மேயர் கல்பனா,"அவங்க சொல்ற மாதிரி எதுவும் கிடையாது. பணம் கொடுத்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை. முதலில் என் கணவரை பற்றி தப்பா போட்டீங்க. இப்போ, என் தம்பி, அம்மாவை பத்தி தப்பா போடுறீங்க.
நீங்க போடுறதுல உண்மை இல்லனா, இந்த பிரச்சனையை வேற மாதிரி கொண்டு போயிருவோம். எனக்கு இருக்கிற ஒரே எதிரி கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு தான். அவங்க சொல்லி தான் இப்படி போடுறீங்க.
இனிமேல் இந்த மாதிரி போட்டீங்கனா, அதை வேறு விதமா சந்திப்பேன்" என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |