மேகன் மெர்க்கல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும்: பகிரங்கமாக ஆதரவளித்த டொனால்டு டிரம்ப்
மேகன் மெர்க்கலை தமக்கு அவ்வளவாக பிடிக்காது என கூறியுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஆனால் மேகன் ஜனாதிபதி தேர்தலில் போடியிட ஆதரவளித்துள்ளார்.
தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த டொனால்டு டிரம்பிடம், ஜனநாயகக் கட்சி நிர்வாகிகளுடன் மேகன் மெர்க்கல் தொடர்பில் இருப்பது, அரசியலில் அவர் களம் காணுவதற்கான அறிகுறியாக பார்க்கலாமா என்ற கேள்விக்கு, அப்படியான ஒரு சூழல் உருவானால் அதை நான் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், அது தம்மை இன்னும் அதிக உத்வேகத்துடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தூண்டும் என்றார்.
மட்டுமின்றி, தாம் மேகன் மெர்க்கலின் ஆதரவாளன் அல்ல என தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், சமீபத்தில் பிரித்தானிய அரச குடும்பம் மீதும், ராணியார் மீதும் மேகன் மெர்க்கல் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை எனவும், ராணியாரை தமக்கு நன்றாக தெரியும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேகன் மெர்க்கலை டொனால்டு டிரம்ப் குறை கூறுவது இது முதன் முறையல்லை, கடந்த செப்டம்பர் மாதமும் அவர் மேகன் மெர்க்கலுக்கு எதிராக பேசி இருந்தார்.
அமெரிக்க மக்கள் வெறுப்பு அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என மேகன் மெர்க்கல் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள டொனால்டு டிரம்ப், மேகன் மெர்க்கல் நல்லவரல்ல என அப்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.