இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம்
ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் இந்தியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், இந்திய பெற்றோரைப் பிரிந்து ஜேர்மனியில் தவித்துவரும் குழந்தையான அரிஹா விவகாரத்தை எழுப்ப கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம்
குஜராத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான பவேஷ் ஷாவும் அவரது மனைவியான தாராவும், 2018ஆம் ஆண்டு ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கு குடிபெயர்ந்தார்கள்.

Credit : bhaskarenglish.in
2021ஆம் ஆண்டு, தம்பதியருக்கு அரிஹா என்னும் பெண் குழந்தை பிறந்தது. பேத்தியைப் பார்ப்பதற்காக அரிஹாவின் பாட்டி இந்தியாவிலிருந்து ஜேர்மனி வந்துள்ளார்.
அப்போது, ஒரு நாள், எதிர்பாராதவிதமாக பாட்டியால் குழந்தைக்கு காயம் ஏற்படவே, குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது, குழந்தையின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, குழந்தையை கைப்பற்றி, அரசு காப்பகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள் அதிகாரிகள்.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, அரிஹா ஜேர்மனியில் காப்பகம் ஒன்றில் வளர்ந்துவருகிறாள். தங்கள் குழந்தை தங்கள் கலாச்சாரத்தில் வளரவேண்டும் என்றும், அவளை இந்தியாவுக்குக் அனுப்பிவைக்கவேண்டும் என்றும் ஜேர்மனி அரசை கோரிவருகிறார்கள் அரிஹாவின் குடும்பத்தினர்.
ஆனால், இந்திய தரப்பு பலவேறு முயற்சிகள் மேற்கொண்டும் இதுவரை அரிஹா விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதற்கிடையில், மாதம் இருமுறை மட்டுமே பெற்றோர் ஜேர்மனிக்குச் சென்று குழந்தையை சந்தித்துவர அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன், அவளது செலவுக்காக 22 லட்ச ரூபாயும், நிர்வாக செலவுகளுக்காக 16 லட்ச ரூபாயும் வழங்கவும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அரிஹாவின் பெற்றோருக்கு ஆதரவாக செயல்படும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Credit : bhaskarenglish.in
இந்நிலையில், இன்று ஜேர்மன் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் இந்தியாவுக்கு வருகைபுரிவதால், குழந்தை அரிஹாவை இந்தியா கொண்டுவருவது குறித்த விவகாரத்தை இந்திய பிரதமர் மோடி, மெர்ஸிடம் எழுப்பவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |