அமெரிக்காவை அடுத்து... ஈரானுக்கு கடும் மிரட்டல் விடுத்த ஐரோப்பிய வல்லரசு நாடொன்று
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை உறுதி என்ற நிலையில், ஈரானிய அரசாங்கத்தின் நாட்கள் எண்ணப்பட்டு விட்டதாக ஜேர்மனியின் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளார்.
நாட்கள் எண்ணப்படுகின்றன
ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் கடந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், வளைகுடாவில் அமெரிக்க இராணுவப் படைகள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையிலேயே, தனது சொந்த மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் மட்டுமே அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு ஆட்சியாக ஈரான் உள்ளது என்றும், அதன் நாட்கள் எண்ணப்படுகின்றன எனவும் மெர்ஸ் எச்சரித்துள்ளார்.
ஆனால், அமெரிக்கா அளித்துவரும் இந்த நெருக்கடிக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்றும் பதிலளித்துள்ளது.
இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள ஈரானின் தூதரகம் தெரிவிக்கையில், பரஸ்பர மரியாதை மற்றும் நலன்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் தயாராக உள்ளது என்றும், ஆனால் ஒரு நெருக்கடிக்கு தாங்கள் தள்ளப்பட்டால், ஈரான் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் என்பதுடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் பதிலடி கொடுக்கும் என்பதும் உறுதி என குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஈரான் மீது இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலின் போது, அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலைக் காப்பாற்றியது என்பதுடன், இஸ்ரேலில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் தகவல் வெளியிடவும் நெதன்யாகு அரசாங்கம் மறுத்தது.
மேலும், ஈரான் மீதான தாக்குதலுக்கு தங்கள் வான்வெளி அல்லது நிலத்தைப் பயன்படுத்த எந்த நாட்டையும் அனுமதிப்பதில்லை என சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் ஈரானுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

இதனிடையே, ஈரானின் அணுசக்தித் திட்டம் என்பது முற்றிலும் அமைதியான நோக்கங்களுக்கானது என்று அந்த நாடு வலியுறுத்தி வருகிறது. அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் ஈரான் மீண்டும் மீண்டும் மறுத்து வருகிறது.
இஸ்ரேலும் அமெரிக்காவும்
தற்போது ட்ரம்ப் அளிக்கும் இந்த நெருக்கடி என்பது, விலைவாசி உயர்வுக்கு எதிராக ஈரான் தலைநகரில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம், திடீரென்று அரசாங்கத்திற்கு எதிரான வன்முறை மற்றும் போராட்டமாக வெடித்ததை அடுத்து, அங்குள்ள மக்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் ஆதரவை தெரிவித்ததன் பின்னரே உருவானது.

மட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு தேவை என்றால் அமெரிக்கா உதவி வழங்கவும் தயாராக இருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், போராட்டங்களைத் தூண்டிவிடும் வேலையை மட்டுமே அமெரிக்கா முன்னெடுத்ததாக அங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இருப்பினும், ஈரான் மீது நடவடிக்கை உறுதி என்றே ட்ரம்ப் கூறி வருகிறார். ஈரானில் தற்போதைய இந்த வன்முறை மற்றும் போராட்டங்களின் பின்னணியில் இஸ்ரேலும் அமெரிக்காவும் செயல்படுவதாகவே ஈரான் நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் HRANA அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், டிசம்பர் மாத இறுதியில் கலவரங்கள் தொடங்கியதிலிருந்து, 5,925 போராட்டக்காரர்கள் உட்பட 6,301-க்கும் மேற்பட்டோர் ஈரானில் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால் நார்வேயில் செயல்படும் இன்னொரு மனித உரிமைகள் குழு முன்னெடுத்த ஆய்வில், 25,000 பேர்கள் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |