2 மில்லியனை எட்டும் இறப்பு எண்ணிக்கை... ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பில் புதிய தகவல்
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகாலப் போரில் கொல்லப்பட்ட, காயமடைந்த அல்லது காணாமல் போன ரஷ்ய மற்றும் உக்ரைன் வீரர்களின் எண்ணிக்கை இந்த வசந்த காலத்திற்குள் 2 மில்லியனை எட்டும் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
பகிரங்கமாக வெளியிடவில்லை
இருப்பினும், ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமடைவதாகவே அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் CSIS என்ற அமைப்பு தயாரித்துள்ள இந்த ஆய்வறிக்கையில், ரஷ்யா தரப்பில் சுமார் 1.2 மில்லியன் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 325,000 இறப்புகள் வரை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், உக்ரைன் தரப்பில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் அல்லது மாயமானவர்கள் எண்ணிக்கை சுமார் 600,000 எட்டியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
விளாடிமிர் புடின் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, இரு தரப்பினரும் விரிவான பாதிப்பு எண்ணிக்கை தொடர்பானப் புள்ளிவிவரங்களை பகிரங்கமாக வெளியிடவில்லை.
மேலும், இரு நாடுகளும் அதை அரசாங்க ரகசியமாகவே பாதுகாத்து வந்துள்ளன. இந்த நிலையில், CSIS அறிக்கையை உண்மைக்கு புறம்பானது என ரஷ்யா நிராகரித்துள்ளது. அத்துடன், ரஷ்ய இறப்பு புள்ளிவிவரங்களை வெளியிட ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஆனால், CSIS அமைப்பின் மதிப்பீடுகள் அனைத்தும் மேற்கத்திய மற்றும் உக்ரேனிய அதிகாரிகளுடனான நேர்காணல்கள் மற்றும் சுயாதீன ரஷ்ய ஊடகமான மீடியாசோனா மற்றும் பிபிசி ரஷ்ய சேவையால் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன.

பலத்த பின்னடைவையே
மேலும், 1980களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றிய இழப்புகளை விட உக்ரைனில் ரஷ்ய போர்க்கள இறப்புகள் 17 மடங்கு அதிகமாகும், மட்டுமின்றி ரஷ்யாவின் முதல் மற்றும் இரண்டாவது செச்சென் போர்களை விட இது 11 மடங்கு அதிகமாகும்.

மட்டுமின்றி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அனைத்து ரஷ்ய மற்றும் சோவியத் போர்களையும் விட இது ஐந்து மடங்கு அதிகம் என்றே ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் உக்ரைனுக்கு ஒரு பலத்த பின்னடைவையே சுட்டிக்காட்டுகின்றன. ஏனெனில் அதன் மக்கள் தொகை மிகவும் குறைவு மற்றும் நீண்டகால இழப்புகளை உள்வாங்கி துருப்புக்களை அணிதிரட்டும் திறன் மிகவும் குறைவாக உள்ளது.

ரஷ்யாவின் நிலை அவ்வாறல்ல, ரஷ்யா தரப்பு இழந்த வீரர்களுக்குப் பதிலாக மீண்டும் ஆட்களை நிரப்புவதற்காக, புதிதாக ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு தாராளமான ஊதியம் மற்றும் விரிவான சலுகைகளின் தொகுப்பையும் அளித்து வந்துள்ளது.
மட்டுமின்றி, பல ஆசிய நாடுகள், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்களை போர்க்களத்தில் அனுமதித்தது. உக்ரைன் தரப்பில், இப்படியான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |