இந்தியா வரும் மெஸ்ஸியின் பயணத்திட்டங்கள் - ஒரு புகைப்படம் எடுக்க இத்தனை லட்சம் கட்டணமா?
இந்தியா வரும் மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க பெரும் தொகை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வரும் மெஸ்ஸி
பிரபல கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, வரும் 13 ஆம் திகதி 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார்.

14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு வரும் மெஸ்ஸி, கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
கொல்கத்தாவின் லேக் டவுன் பகுதியில், அவரது 70 அடி உயர பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை மெஸ்ஸி திறந்து வைக்க உள்ளார். Sree Bhumi Sporting Club சார்பில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

ஹைதராபாத் வரும் மெஸ்ஸி அங்கு நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாட உள்ளார். இந்த போட்டியில் மெஸ்ஸி உடன் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் விளையாட உள்ளார்.

டிசம்பர் 14 ஆம் திகதி, மும்பையில் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள பேஷன் ஷோவில் மெஸ்ஸி ரேம்ப் வாக் செய்து, தனது 2022 ஃபிஃபா உலகக் கோப்பை நினைவுப் பொருட்களில் ஒன்றை ஏலம் விடுவார் என்று கூறப்படுகிறது.
இதில், கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளார்.
புகைப்படம் எடுக்க கட்டணம்
அதைத்தொடர்ந்து, டெல்லி செல்லும் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதோடு, கால்பந்து வீரர்களுக்கான பாராட்டு விழாவிலும் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில், மெஸ்ஸி உடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்னுமா அரண்மனையில் நடைபெற உள்ளது.
இதில், 100 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், ஒரு புகைப்படம் எடுக்க கட்டணமாக ரூ.9.95 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |