131 அடி உயரத்திலிருந்து விழுந்த 13 வயது சிறுமி! ஹாட் ஏர் பலூன் தீ விபத்தில் விமானி கைது
மெக்ஸிகோவில் ஹாட் ஏர் பலூன் தீ விபத்திற்கு உள்ளானதில் கணவன், மனைவி பலியான நிலையில், உயிர்தப்பிய அவர்களது மகள் மருத்துவமனையில் இருக்கிறார்.
பலூன் தீப்பிடித்த விவகாரம்
மெக்ஸிகோவின் தியோதிஹுவானில் ஹாட் ஏர் பலூனில் ஒரு தம்பதி தங்கள் 13 வயது மகளுடன் பயணித்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் கீழே குதித்த கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களது 13 வயது மகள் 131 அடி கீழே குதித்ததில் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் 16 அடி உயரத்தில் பலூன் இருந்தபோது அதனை இயக்கிய விமானி கீழே குதித்து உயிர் தப்பினார். விக்டர் குஸ்மான் என்ற அந்த நபர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
விமானியின் கூற்று
பலூனில் பயணித்த குடும்பத்தினர் ஒரு ஆச்சரியமான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வாடகைக்கு எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ரெஜினா இட்சானி என்ற அந்த 13 வயது சிறுமி 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கை உடைந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, பலூன் தீப்பிடித்த வீடியோ வெளியாகி பலரையும் திகைப்பில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.