உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் படுகொலை
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலத்தில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பெண் சுற்றுலாப் பயணி கொல்லப்பட்டதோடு, சிறார் உட்பட பலர் காயமடைந்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
கனேடியப் பெண்
மெக்சிகோவில் உள்ள தியோதிஹுவாகன் பிரமிடுகளுக்கு வெளியே அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், கனடாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கொல்லப்பட்டார்.

பின்னர் அவர் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். Pyramid of the Moon என அறியப்படும் அந்த தலத்தில் ஆயுதம் ஏந்திய நபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது காணொளியாக வெளியாகியுள்ளது.
மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சரவை, சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்தப் பயங்கரமான சம்பவத்தை உறுதிப்படுத்தியது. ஒரு குழந்தை உட்படப் பலரும் காயமடைந்து, மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தொல்லியல் தளத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபர், இரண்டு கொலம்பியர்கள், ஒரு ரஷ்யர் மற்றும் ஒரு கனடியர் என நான்கு பேரை காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த நால்வர்
பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டினர் என்பதை மெக்சிகோவின் பாதுகாப்புச் செயலகத் தலைவர் கிறிஸ்டோபல் காஸ்டானெடா உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, உள்ளூர் செய்திகளின் அடிப்படையில், காயமடைந்த நால்வரில் ஒருவருக்கு எலும்பு முறிவும், மற்றொருவருக்கு சுளுக்குக்கும், இன்னொருவருக்கு பதட்டத் தாக்குதலுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காயமடைந்தவர்களில் ஒருவர் சிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திலிருந்து ஒரு துப்பாக்கி, ஒரு கூர்மையான ஆயுதம் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |