எம்.கே.ராதா காலில் விழுந்தவர் எம்ஜிஆர்: தரக்குறைவாக பேசிய ஆ.ராசாவுக்கு காயத்ரி ரகுராம் பதிலடி
எம்.கே.ராதா காலில் எம்ஜிஆர் விழுந்ததாக திமுக எம்பி ஆ.ராசா தரக்குறைவாக பேசிய நிலையில் காயத்ரி ரகுராம் பதில் அளித்துள்ளார்.
எம்கே.ராதா காலில் விழுந்தவர் எம்ஜிஆர் என்றும், லூசு என்றும் தரம் தாழ்ந்து கடுமையாக விமர்சனம் செய்த திமுக எம்.பி ஆ.ராசாவின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
காயத்ரி ரகுராம்
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "மனிதரை மதிக்கும் மனிதநேயமிக்க எடுத்துக்காட்டாக அமைந்த நிகழ்வு. ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. விழா மேடையில் கலைஞர்கள், பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், அமைச்சர் நெடுஞ்செழியன் ஆகியோர் உள்ளனர்.
இப்போது விருது வழங்கும் நிகழ்ச்சி, முதல்வர் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களும் மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர் இப்போது ராதா விருதுவாங்க செல்லும்போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்து தரச்செய்கிறார். ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி.
ராதாவுக்கும் மிக ஆதங்கம், முதல்வர் கையினால் வாங்க முடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி. மேடையில் முதல்வரைக் காணவில்லை. குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப் பார்த்து இன்னும் அதிர்ச்சி.
ராதா ஏதோ சொல்லமுயலும் போது அவரை தடுத்து எம்.ஜி.ஆர் கூறியதாவது, "நான் ஆரம்பகாலத்தில் கஷ்டப்படும் போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும் தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி இருக்க இடம் உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்து நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தங்களை அவமதிக்கும் செயலாகும்.தங்களன்றோ என்னை ஆசீர்வதித்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்கவேண்டும்" என்று சொன்னது தான் தாமதம்.
ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின. ஒரு மாநில முதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச் செய்து ராதா அவர்களுக்குப் பெருமை சேர்த்ததை புகழ வார்த்தைகள் தான் ஏது?" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |