12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம்
F1 உலக சாம்பியன் ஷூமேக்கரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மைக்கேல் ஷூமேக்கர்
ஜேர்மனியை சேர்ந்த 57 வயதான மைக்கேல் ஷூமேக்கர், 7 முறை பார்முலா 1 கார் பந்தயத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பார்முலா 1 கார் பந்தயத்தில் எந்த காலத்திலும் சிறந்த F1 கார் ஓட்டுநராக மைக்கேல் ஷூமேக்கர் அறியப்படுகிறார்.
கடந்த 2013 ஆம் ஆண்டில் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலைச்சரிவில் தமது மகனுடன் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்ததில் அவரின் தலை பாறையில் மோதி கோமாவிற்கு சென்றார்.

தலைக்கவசம் அணிந்திருந்ததாலே அவர் உயிர் தப்பினார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இருந்தும் 2 அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டும், ஷூமேக்கர் 250 நாட்களுக்கு கோமாவில் இருந்தார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள அவரது வீட்டில், அவரை 24 மணி நேரமும் குடும்பத்தினர் மற்றும் மருத்துவக்குழுவினர் கவனித்து வருகினர். இதற்காக வாரத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.12 லட்சம் செலவானதாக கூறப்படுகிறது.
உடல் நிலையில் முன்னேற்றம்
கோமாவில் இருந்து மீண்டாலும் ஷூமேக்கர் கடந்த 12 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே இருந்தார். தற்போது அவரின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது ஷூமேக்கரால், நாற்காலியில் அமர முடிகிறது எனவும், சுற்றி நடப்பவற்றை ஓரளவிற்கு உணர முடிகிறது எனவும் தெரிய வந்துள்ளது. ஆனால் அவரது பேச்சுத்திறன் இன்னும் முழுமையாக மீளவில்லை.

மூளையில் திடீரென வெளிப்புற தாக்குதலால் ஏற்படும் இத்தகைய காயங்கள் TBI எனப்படும். பொதுவாக இந்த பாதிப்புக்குள்ளானவர்கள் முதல் 2 ஆண்டுகளில் ஓரளவுக்கு குணமடைவார்கள். ஆனால் ஷூமேக்கர் 12 ஆண்டுகளுக்குப் பிறகும் முன்னேற்றம் கண்டுள்ளார்.
அறுவை சிகிச்சை மட்டுமல்லாது, பிசியோதெரபி, பேச்சுத்திறனை மீட்டெடுக்க பயிற்சி, தசைகளின் வலிமையை மீட்டெடுத்தல், கவனத்திறனை மேம்படுத்துதல் என பல கட்ட பயிற்சி, குடும்பத்தினரின் அர்ப்பணிப்பு ஆகியவையே முன்னேற்றத்திற்கு காரணமாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |