தீவிர புயலாக வலுப்பெறுகிறது மிக்ஜாம்! அரசின் முக்கிய எச்சரிக்கை
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் இன்று முற்பகலுக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிறன்று காலை புயலாக வலுப்பெற்றது.
மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னைக்கு அருகே சுமார் 110 கிமீ தொலைவில் இருக்கிறது.
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இன்று முற்பகலுக்குள் மிக்ஜாம் புயல் தீவிரப்புயலாக வலுப்பெறும் என்றும், இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பொதுமக்கள் பத்திரமாக வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு சென்றுவிட வேண்டும் என்றும், முக்கியமான ஆவணங்களை பத்திரமாக வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அவசர உதவிக்கு மாநில அவசரக்கால செயல்பாட்டு மைய எண் -1070, வாட்ஸ் அப் எண் 94458 69848, மாவட்ட அவசரக்கால செயல்பாட்டு மைய எண் -1077 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.