தென்னாப்பிரிக்காவில் வேகமாக சரியும் Omicron தொற்று... பிரித்தானியாவிலும் இதே நிலை ஏற்படுமா?
தென்னாப்பிரிக்காவில் Omicron வகை கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது. இந்த செய்தி, இதே நிலைமை பிரித்தானியா முதலான மற்ற நாடுகளிலும் ஏற்படலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பரில், Omicron வகை கொரோனா தொற்று தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவத்தொடங்கியது. தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை, 670இலிருந்து மூன்றே வாரங்களில் 20,000ஐத் தாண்டியது.
டிசம்பர் 15 அன்று அந்த எண்ணிக்கை 26,976 ஆக உயர்ந்த நிலையில், மருத்துவமனைகள் நிரம்பி வழியுமோ என்ற அச்சம் உருவானது. ஆனால், தற்போது, Omicron வகை கொரோனா தொற்று கடந்த ஐந்து நாட்களாக வேகமாக குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் இந்த எண்ணிக்கை 22 சதவிகிதம் குறைந்து, 21,099 ஆகியுள்ளது.
அத்துடன், தற்போது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கூட மிதமான தொற்றுடனேயே வருவதாக மருத்துவர்களும் தெரிவிக்கிறார்கள்.
இன்னொரு நல்ல அறிகுறி என்னவென்றால், தென்னாப்பிரிக்காவில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் சீராகத் துவங்கியுள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று உச்சத்திலிருந்தபோது நாளொன்றிற்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2,000 வரை சென்றது. தற்போது அது 400க்கும் குறைவாகவே உள்ளது.
அதேபோல், கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
ஆனால், தென்னாப்பிரிக்காவில் மக்கள் தொகை குறைவு மற்றும் இள வயதினர் அதிகமாக இருப்பதே இந்த நிலைக்கு காரணம் என்று கூறி, Omicron வகை கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது என்ற கூற்றை நிராகரித்துள்ளார் பிரித்தானிய தலைமை மருத்துவ அலுவலரான பேராசிரியர் Chris Whitty.
ஆரம்பத்திலிருந்தே Omicron வகை கொரோனா தொற்று தொடர்பில் பிரித்தனியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் கருத்து வேற்றுமைகள் இருந்துகொண்டேதான் இருக்கிறது.
அவ்வகையில், தென்னாப்பிரிக்கா சொல்வதுபோல உண்மையிலேயே Omicron வகை கொரோனா தொற்று குறைகிறது என்றாலும், அது அனைவருக்கும் நல்ல செய்திதானே!