மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான திடீர் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ள அமெரிக்கா
US Issues Middle East Security Alert: அமெரிக்கா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேலும் இராணுவ நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
எச்சரிக்கை
அக்டோபர் 18 அன்று விடுக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையில், ஹவுதிகள் சம்பந்தப்பட்ட மோதல்கள், அவை நடைபெறும் இடங்களைக் கடந்து மிக விரைவாக விரிவடையக்கூடும் என்று அம்மான் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்தது.

அப்பகுதிக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் அமெரிக்கர்கள், விமான மற்றும் விமான நிலையச் செயல்பாடுகளைக் கண்காணித்து, மாற்றுத் திட்டங்களைத் தயார் செய்துகொள்ளுமாறு அந்த எச்சரிக்கையில் அறிவுறுத்தியது.
மேலும், ஈரானும் அந்த நாட்டிற்கு ஆதரவளிக்கும் குழுக்களும் அமெரிக்க குடிமக்கள், வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடைய பிற இடங்களை இலக்கு வைக்கக்கூடும் என்றும் அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
சமீபத்தில் சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இந்தப் பாதுகாப்பு எச்சரிக்கை வெளியாகியுள்ளது. அதில், GBU-43/B மாபெரும் வான்வழித் தாக்குதல் ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட, ஈரானுக்கு எதிரான கூடுதல் தாக்குதல் வழிமுறைகளை அமெரிக்கா உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பகிரங்கமாக ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து பதட்டங்களும் தீவிரமடைந்துள்ளன.
முடித்துவிடுவார்கள்
ஏற்கனவே கடும் நெருக்கடியில் இருக்கும் நெதன்யாகு, தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனிடையே, ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ஈரான் தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் விரைவில் அந்த வேலையை முடித்துவிடுவார்கள் என்று எச்சரித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஈரான் எதற்கும் தயாராக இருப்பதாக எச்சரித்தார். அத்துடன், தேர்தல் ஆதாயத்திற்காக அமெரிக்காவை மற்றொரு போரை நோக்கி நெதன்யாகு தள்ளுவதாகவும் குற்றம் சாட்டினார்.