புயலில் சிக்கி மூழ்கிய புலம்பெயர்ந்தோர் படகு... மூன்று நாட்கள் கடலில் தனியாக தத்தளித்த சிறுமி
புலம்பெயர்ந்தோர் படகு ஒன்று புயலில் சிக்கி மூழ்கியதில், சிறுமி ஒருவர் கடலில் தத்தளித்து மூன்று நாட்களுக்கு பிறகு உயிர் தப்பியுள்ளார்.
45 பேர்களில் அவர் மட்டுமே
லைஃப் ஜாக்கெட் அணிந்து, டயரின் உள் குழாய்களைப் பிடித்துக் கொண்டு அந்த 11 வயது சிறுமி மூன்று நாட்கள் கடலில் தத்தளித்துள்ளார். சியாரா லியோனைச் சேர்ந்த அந்த சிறுமி புதன்கிழமை அதிகாலை இத்தாலியின் லம்பேடுசா தீவின் கடற்பகுதியில் மீட்கப்பட்டார்.
புயலில் சிக்கிய படகில் பயணித்த 45 பேர்களில் அவர் மட்டுமே உயிர் பிழைத்தவர் என்று கூறப்படுகிறது. துனிசிய நகரமான ஸ்ஃபாக்ஸிலிருந்து ஒரு உலோகப் படகில் புறப்பட்டதாக அவர் மீட்ப்புக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றின் படகே, கடலில் தத்தளிக்கும் சிறுமியை மீட்டுள்ளது. உணவு, தண்ணீரின்றி மூன்று நாட்கள் கடலில் தத்தளித்த சிறுமி மீட்கப்படும் போது மிகவும் சோர்ந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
24,300 க்கும் மேற்பட்டோர்
சிறுமி பயணித்த படகு புயலில் சிக்கிக்கொள்ள, வேறு இருவருடன் கடலில் மிதந்ததாக குறிப்பிட்டுள்ளார். நாள் முழுவதும் வீசிய புயலில் 2.5 மீற்றர் உயரத்திற்கு எழுந்த அலைகளில் இறுதியாக அந்த சிறுமி மட்டுமே உயிர் தாப்பியதாக கூறப்படுகிறது.
மருத்துவ உதவி அளித்ததன் பின்னர் அகதிகள் முகாமிற்கு சிறுமி மாற்றப்பட்டுள்ளதாகவும், இத்தாலியின் செஞ்சிலுவை சங்கம் இனி அவரை கவனித்துகொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துனிசியா, லிபியா, இத்தாலி மற்றும் மால்டா இடையேயான கடல் இடம்பெயர்வு பாதை என்பது உலகின் மிகவும் ஆபத்தான ஒன்றாகும், இதில் 2014 முதல் 24,300 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் அல்லது இறந்துள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |