புலம்பெயர்ந்தவர் கனடாவில் வேலை செய்வதாக நம்பிகொண்டிருக்கும் குடும்பத்தினர்: அவர்களுக்குத் தெரியாத துயர செய்தி
கனடாவின் ஒன்ராறியோவில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த புலம்பெயர்ந்தோர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜமைக்கா நாட்டவரான அந்த 40 வயதுகளிலிருக்கும் புலம்பெயர்ந்தோர், இம்மாத துவக்கத்தில் ஒன்ராறியோ வந்தடைந்துள்ளார். அவர் தனிமைப்படுத்தல் மையம் ஒன்றில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தார். அவரது தனிமைப்படுத்தல் முடிவடைய இருந்த நேரத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கும், திங்கட்கிழமைக்கும் நடுவில் அவர் உயிரிழந்துள்ளார்.
செவ்வாயன்று அவரது தனிமைப்படுத்தல் முடிவடைய இருந்த நிலையில், அதற்கு முன்பே அவர் உயிரிழந்துள்ளதால் கடும் சோகமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் அவர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் பெற்றுள்ளார்.
அவருக்கு வேலை கொடுக்க இருந்த விவசாயி ஒருவர் அவரைப் பார்ப்பதற்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஹொட்டலுக்குச் சென்றிருக்கிறார்.
அந்த விவசாயி, அந்த புலம்பெயர்ந்தோரை அழைத்தபோது, அவர் பதிலளிக்கவில்லையாம். உடனே அந்த விவசாயி ஹொட்டல் மேலாளரை அழைக்க, இருவருமாக அறைக்குள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அந்த அறையின் கதவைத் திறந்து பார்க்கும்போது, அந்த புலம்பெயர்ந்தோர் பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதைக் கண்டுள்ளார்கள்.
அவரது பெயர், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.
அந்த புலம்பெயர்ந்தோர் வேலைக்காக கனடா வந்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் அவர் வேலை செய்துகொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டிருக்க, அவர் இங்கே உயிரிழந்துவிட்டது அவர்களுக்குத் தெரியுமா என்பது கூட இங்குள்ள யாருக்கும் தெரியவில்லை.
அவர்களை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகளில் தொண்டு நிறுவனம் ஒன்று இறங்கியுள்ளது.
இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.