இத்தாலி அருகே 2 படகுகள் மூழ்கி 11 பேர் பலி., 26 குழந்தைகள் உட்பட 64 பேர் மாயம்
இத்தாலி கடற்கரையில் நேற்று (திங்கட்கிழமை) இரண்டு படகுகள் மூழ்கியதில் 11 பேர் இறந்தனர் மற்றும் 64 பேர் இன்னும் காணவில்லை.
ஜேர்மனியின் தொண்டு நிறுவனமான RESQSHIP, லம்பேடுசா தீவுக்கு அருகில் 51 பேரை மீட்டதாகத் தெரிவித்துள்ளது.
முதல் படகு
மீட்புப் பணியின்போது மரப் படகொன்றின் கீழ் தளத்தில் இருந்து 10 சடலங்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் இத்தாலிய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
லிபியாவில் இருந்து புறப்பட்டதாக கூறப்படும் இந்த படகில் சிரியா, எகிப்து, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் பயணித்துள்ளனர்.
இரண்டாவது படகு
இதற்குப் பிறகு, அதே நாளில், இத்தாலியின் தெற்கு முனையான கலாப்ரியா கடற்கரையிலிருந்து 201 கிமீ தொலைவில் மற்றொரு படகு மூழ்குவதை RESQSHIP கண்டது.
8 நாட்களுக்கு முன்பு துருக்கியில் இருந்து புறப்பட்ட இந்தப் படகு தீப்பிடித்து, பின்னர் கவிழ்ந்தது.
Al Jazeera-வின் அறிக்கையின்படி, படகில் இருந்த 11 பேர் மீட்கப்பட்டனர், 64 பேர் காணவில்லை. மேலும் காணாமல் போனவர்களில் 26 பேர் குழந்தைகள் என கூறப்படுகிறது.
படகில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். ஐரோப்பிய ஒன்றிய எல்லை நிறுவனமான ஃபிரான்டெக்ஸின் உதவியுடன் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக இத்தாலியின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இந்த இரண்டாவது படகில் ஈரான், சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் பயணித்துள்ளனர், அதில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகுகளில் உயிர்காக்கும் உடைகள் எதுவும் இல்லை என கடலோர காவல்படையினர் தெரிவித்தனர். மூழ்கும் போது எந்த கப்பலும் உதவிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
மார்ச் UN அறிக்கையின்படி, மத்தியதரைக் கடல் மிகவும் ஆபத்தான இடம்பெயர்வு பாதையாகும். ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு மூலம் இத்தாலிக்கு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்த வழியாக சென்ற 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளனர்.
அவர்களைக் காப்பாற்ற, இத்தாலி அரசு 'மேரே நாஸ்ட்ரம்' என்ற ஆபரேஷன் ஒன்றையும் மேற்கொண்டது. மத்தியதரைக் கடலில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதே இதன் நோக்கம். இதன் மூலம் இதுவரை ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை இத்தாலி அரசு காப்பாற்றியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |