பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வேலை செய்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றம்
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வேலை செய்துவந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக வேலை செய்துவந்த புலம்பெயர்ந்தோர்
புகலிடம் கோரி பிரித்தானியாவுக்கு வந்து, அரசின் உதவி பெற்று, அரசு அனுமதிக்கும் ஹொட்டல்களில் தங்கியிருப்போர், Deliveroo, Just East மற்றும் Uber Eats போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் வேலை செய்துவருவது சில மாதங்களுக்கு முன் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, புகலிடக்கோரிக்கையாளர்கள் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்யவிடாமல் தடுக்க உள்துறை அலுவலகம் கடும் நடவடிக்கைகளைத் துவக்கியது.
ரெய்டுகள் நடத்தி, உணவு டெலிவரி செய்யும் புகலிடக்கோரிக்கையாளர்களை மடக்கிப் பிடிக்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டன.
மேலும், புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கும் இடங்களின் முகவரிகளை உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்குக் கொடுத்து, அந்த முகவரியில் வாழ்வோருக்கு வேலை கொடுக்ககூடாது என அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவும் நிறுவனங்களுக்கு 60,000 பவுண்டுகள் அபராதம் முதல் சிறைத்தண்டனை வரை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றம்
இந்நிலையில், பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வேலை செய்துவந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

அவ்வகையில், 1050க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், இந்த ஆண்டு, அதாவது, 2025 செப்டம்பர் வரை, புலம்பெயர்தல் அதிகாரிகள் 11,000 ரெய்டுகள் நடத்தியுள்ளதாகவும், அதில், 8,000 புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
எப்படியாவது பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிட்டால் போதும், ஏதாவது ஒரு வேலையைச் செய்து பிழைத்துகொள்ளலாம் என்னும் எண்ணத்தில்தான் பலர் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறார்கள்.
இனி அது நடக்காது என்று கூறியுள்ள உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், பிரித்தானியாவின் எல்லைகளைப் பாதுகாக்க, என்னாலியன்ற அனைத்தையும் செய்வேன் எனகூறியிருந்தார்.
அவர் கூறியதுபோலவே, பிரித்தானியாவில், உணவகங்கள், உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், சலூன்கள் மற்றும் கார் வாஷ் செய்யும் இடங்களில் சட்டவிரோதமாக வேலை செய்துவந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |