டிரக் டிரைவர் முதல் 1 கோடி ரூபாய் வருமானம் வரை.., படிப்பை நிறுத்தினாலும் சாதனை புரிந்த நபர்
ஒரு டிரக் டிரைவராக பணிபுரிந்து ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனத்தை நடத்தும் மனிதரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
யார் அவர்?
இந்திய மாநிலமான தெலங்கானா, சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள கங்காபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதர் வீர் ஷெட்டி (Biradhar Veer Shetty).
மூன்று சகோதரர்களில் மூத்தவரான இவர் இளம் வயதிலேயே பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டார்.
அப்போது, இவரது குடும்பம் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டதால் 9 ஆம் வகுப்பு முடித்தவுடன் படிப்பை நிறுத்தினார். பின்னர், தனது குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.
ஒரு டிரக் உதவியாளராகத் தொடங்கி இறுதியில் டிரக் டிரைவராக ஆனார். மேலும், ராமோஜி ஃபிலிம் சிட்டியில் சிறிய நடிகராகவும் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு சொந்தமாக இருந்த 11 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் ஆசைப்பட்டார்.
இதனிடையே, 2006 ஆம் ஆண்டு ICRISAT இல் டிரைவராகவும் பொது உதவியாளராகவும் இருந்த காலத்தில், புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் பணிபுரிந்து மேம்பட்ட விவசாய நுட்பங்களைக் கற்றுக்கொண்டார்.
மேலும், மகாராஷ்டிராவின் வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையைக் கண்ட பிறகு தினை விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று எண்ணம் வந்துள்ளது.
பின்னர், 2009 இல் தனது முதல் தினை ரொட்டி கடையை ரூ.20,000 ஆரம்ப முதலீட்டில் ஹைதராபாத்தில் திறந்தார். இது இறுதியில் பிரபலமடைந்து விரைவான வணிக வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
தினை விவசாயம்
இதையடுத்து, தனக்கு இருந்த 18 ஏக்கர் பண்ணையில் கரும்பு, கொண்டைக்கடலை, செம்பருத்தி, ஜோவர், பஜ்ரா, ஃபாக்ஸ்டெயில் தினை மற்றும் விரல் தினை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை பயிரிட்டார்.
2009 ஆம் ஆண்டில், ஹைதராபாத்தில் தினைகளுக்கான மதிப்பு கூட்டப்பட்ட மையமான S S பவானி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை (S S Bhavani Foods Pvt Ltd) நிறுவினார்.
பின்னர், அடுத்த ஏழு ஆண்டுகளில் சோளம், பஜ்ரா, ஃபாக்ஸ்டெயில் தினை மற்றும் விரல் தினை ஆகியவற்றைப் பயன்படுத்தி 60 மதிப்பு கூட்டப்பட்ட தினை தயாரிப்புகளை இவரது நிறுவனம் தயாரித்தது.
தற்போது இந்நிறுவனமானது 8 மாநிலங்களில் இயங்கி 40 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ரூ.1 கோடி வருவாய் ஈட்டி வெற்றிகரமான தொழில்முனைவோராக பிரதர் வீர் ஷெட்டி உள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஸ்வாவலம்பன் அக்ரி அறக்கட்டளை மூலம், விவசாயிகளுக்கு ஆதரவளித்து, தினை விவசாயம் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றை ஊக்குவித்து வருகிறார். மேலும் இவர் 'தெலுங்கானாவின் தினை மனிதன்' என்றும் அழைக்கப்படுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |