இறுகும் கட்டுப்பாடுகள்... தடுப்பூசி மறுப்பாளர்களுக்கு ஊரடங்கு: மில்லியன் கணக்கான மக்கள் சிக்கலில்
ஆஸ்திரியா நாட்டில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மில்லியன் கணக்கான மக்கள் புதிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த தகவலை சேன்ஸலர் அலெக்சாண்டர் ஷால்லென்பெர்க் இன்று அறிவித்துள்ளார். ஆஸ்திரியாவின் தற்போதைய நோய்த்தொற்று விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் மொத்தமுள்ள அவசர சிகிச்சை பிரிவுகளி அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 30 சதவீதத்தை எட்டினால், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்கள் அனைவரும் தனியாக ஊரடங்கில் வைக்கப்படுவார்கள் என கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய சூழலில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும், ஆனால் அந்த எண்ணிக்கை மிக விரைவாக உயர்ந்து காணப்படுவதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆஸ்திரியாவின் மக்கள் தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். இது, எந்த மேற்கு ஐரோப்பிய நாட்டிலும் இல்லாத குறைந்த விகிதம் என்றே தெரிய வந்துள்ளது.
இதே நிலை நீடிக்கும் எனில், இன்னும் சில நாட்களில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு இலக்காவார்கள் என அதிகாரிகள் தரப்பில்,சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்களில் அனுமதிக்க வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
அமுலுக்கு கொண்டுவரப்படும் புதிய விதியில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், வேலைக்கு செல்ல, அத்தியாவசிய உணவு பண்டகங்கள் வாங்க மட்டுமே குடியிருப்பில் இருந்து வெளியேற வேண்டும்.
இதனால், மில்லியன் கணக்கான ஆஸ்திரிய மக்கள் அவதிக்கு உள்ளாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.